Last Updated : 27 May, 2023 12:45 PM

 

Published : 27 May 2023 12:45 PM
Last Updated : 27 May 2023 12:45 PM

கம்பம் நகருக்குள் நுழைந்த காட்டு யானை - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

கம்பம் நகரில் சுற்றிவரும் காட்டு யானை அரிகொம்பன்

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் இன்று காலை காட்டுயானை ஒன்று புகுந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இவற்றை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், வட்டக்கானல் வனப்பகுதியில் அரிசி கொம்பன் என்னும் காட்டுயானையின் நடமாட்டம் அதிகம் இருந்தது. இதுவரை 8 பேர் இந்த யானை தாக்கி உயிரிழந்துள்ளனர். ரேஷன் கடைகளை சேதப்படுத்திஅரிசி உள்ளிட்டவற்றை விருப்ப உணவாக உண்டதால் இதனை கேரளாவில் அரி கொம்பன் யானை என்ற பெயரிட்டு அழைத்தனர்.

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்ததால் இந்த யானையை இடமாற்றம் செய்ய கேரள வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக கடந்த ஏப்.29-ம் தேதி இந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி லாரியில் ஏற்றி தமிழக கேரள எல்லையான பெரியாறு புலிகள் காப்பகம் அருகே முல்லைக்கொடி எனும் வனப்பகுதியில் விட்டனர். முன்னதாக இதன் நடமாட்டத்தை தெரிந்துகொள்ள வசதியாக இதன் கழுத்தில் சாட்டிலைட் ரேடியோ காலர் பொருத்தப்பட்டது.

மயக்க ஊசியின் தாக்கத்தில் இருந்த இந்த யானை சில நாட்களில் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. பின்னர் தமிழக எல்லையான கண்ணகி கோயில் பகுதிக்கு சென்றது. தொடர்ந்து மேகமலை வனப்பகுதிக்குள் நுழைந்தது. ஹைவேவிஸ் சாலையில் வந்த அரசு பேருந்து மற்றும் மணலாறு பகுதியில் உள்ள ரேஷன் கடையை அடுத்தடுத்து தாக்கியது. இதனால் மேகமலை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த யானை குமுளி அருகே ரோசாப்பூக் கண்டம் எனும் பகுதிக்கு இடம் பெயர்ந்தது. பின்பு குமுளி மலைப்பாதை வழியே தமிழகப் பகுதியான லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலைய பகுதிக்கு சென்றது. இந்த யானை கேரள வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து விடும் என்று பலரும் எண்ணிய நிலையில் இன்று (மே 27) காலை இந்த யானை கம்பம் நகருக்குள் புகுந்தது. கூடலூர் மெயின் சாலையில் வந்த இந்த யானை மின்அலுவலகம் அருகே சென்றது. இதனைப்பார்த்த பொதுமக்கள் காவல் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலரும் கூச்சலிட்டனர். இதனால் பொதுமக்கள் ஓடி ஒளிந்தனர். வாகனங்களின் மூலமாகவும் ஹார்ன் ஒலியை அதிக சப்தத்தில் ஒலிக்கச் செய்து பொதுமக்களை விலகிச் செல்லும் படி வலியுறுத்தினர்.

வீட்டை விட்டு யாரும் வரவேண்டாம் என்று போலீஸார் ஒலிபெருக்கியில் எச்சரித்தபடியே யானையின் பின்னால் சென்றனர்.

தொடர்ந்து கம்பம் நகரின் பல்வேறு தெருக்களுக்குள்ளும் யானை சுற்றிக் கொண்டிருப்பதால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. அதனை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான ஏற்பாடுகளை போலீஸாரும், வனத்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x