Last Updated : 27 Oct, 2017 08:13 AM

 

Published : 27 Oct 2017 08:13 AM
Last Updated : 27 Oct 2017 08:13 AM

வாசகர்களின் குரலாக ஒலிக்கும் ‘ஆம்புட்ஸ்மேன்’! - சென்னையில் சர்வதேச மாநாடு

கிரேக்க தத்துவ அறிஞர் ஹெரக்லைடஸ் பாரசீக சாம்ராஜ்யத்தில் எபசஸ் நகரில் கி.மு.535-ல் பிறந்தவர். அவர் தெரிவித்த ‘மாற்றமே இந்த உலகில் நிரந்தரம்’ என்ற தத்துவம் இன்றைக்கு வேறு எந்த துறைக்கு பொருந்துகிறதோ இல்லையோ பத்திரிகை துறைக்கு மிகவும் பொருத்தமாக இருந்து வருகிறது. பத்திரிகைகளின் வடிவம், நோக்கம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாறிக் கொண்டே வருகிறது. அச்சுக்கலையை வெளிப்படுத்த, தேசப்பற்றை ஊட்ட, உரிமைகளுக்காக போராட, கருத்து சுதந்திரத்தை வெளியிட என பல்வேறு நோக்கங்களில் செயல்பட்ட இதழியல் துறை தற்போது சமூக வலைதளங்கள் வளர்ச்சி காரணமாக எவராலும் கட்டுக்குள் கொண்டு வர முடியாத வரம்பற்ற வளர்ச்சியை எட்டியுள்ளது.

ஒரு செய்தி வெளிவந்த சில நொடிகளில் அதன்மீதான நேர்மறை, எதிர்மறை கருத்துகள் மட்டுமின்றி, பொய் பிரச்சாரங்களும் கூட சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் தொடங்கி விடுகின்றன. இத்தகைய நெருக்கடி மிகுந்த நிலையிலும், புதிய மாற்றங்களுக்கு ஏற்ப பத்திரிகைகள் தங்களை மாற்றிக் கொண்டு மக்களுக்கு தொய்வின்றி பணியாற்றி வருகின்றன. வெளிவந்த செய்திகள் மீது தங்கள் புகாரை வெளியிடுவதற்காக ‘ஆம்புட்ஸ்மேன்’ என்ற அமைப்பு வளர்ந்த நாடுகளில் உருவாக்கப்பட்டது. ஒரு சில பத்திரிகைகள் மட்டுமே வாசகர்களுக்கு இத்தகைய வசதியை ஏற்படுத்தி தருகின்றன. இதையொட்டி இந்தியாவில் முதல் முறையாக, ‘ரீடர்ஸ் எடிட்டர்’ என்ற ஒரு நடுவரை நியமித்த முதல் பத்திரிகை என்ற பெருமை ‘தி இந்து’ நாளிதழுக்கு உண்டு. வாசகர்கள் இவருக்கு அனுப்பும் புகார்கள் மீது ஆய்வு நடத்தி, உரிய திருத்தங்களும் மாற்றங்களும் வெளியிடப்படுகின்றன. இதன்மூலம், வாசகர்களின் குரலுக்கு உரிய மதிப்பளிக்கும் பாலமாக ‘தி இந்து’வின் ‘ரீடர்ஸ் எடிட்டர்’ பிரிவு செயல்படுகிறது.

உலகம் முழுவதும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் இத்தகைய ‘ஆம்புட்ஸ்மேன்’ பணியை மேற்கொள்வோர் இணைந்து ஓஎன்ஓ (ஆர்கனைசேஷன் ஆப் நியூஸ் ஆம்புட்ஸ்மேன்) என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். அர்ஜென்டினா, பெல்ஜியம், பிரேசில், கனடா, ஆஸ்திரேலியா, டென்மார்க், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பிரபல பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் மாநாடு நடத்தப்பட்டு பத்திரிகை துறை சந்தித்துவரும் முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு சென்னையில் ஓஎன்ஓ அமைப்பின் மாநாடு கடந்த 22-ம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடந்தது. இந்த மாநாட்டுக்கு ‘தி இந்து’ நாளிதழ் ஏற்பாடுகளை செய்திருந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபல பத்திரிகை, தொலைக்காட்சிகள் சார்பில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஓஎன்ஓ அமைப்பின் தலைவர் எஸ்தர் எங்கின் தலைமையில் நடந்த இம்மாநாட்டில் ‘தி இந்து’ குழும தலைவர் என்.ராம் பங்கேற்று பத்திரிகை துறை சந்தித்துவரும் சவால்களையும், ‘ரீடர்ஸ் எடிட்டர்’ பணியை இந்தியாவில் முதன்முதலில் உருவாக்கியதன் மூலம் கடந்த 11 ஆண்டுகளில் நாளிதழுக்கு கிடைத்த அனுபவங்களையும் சுட்டிக் காட்டி பேசினார். ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் ஆசிரியர் முகுந்த் பத்மனாபன் பேசும்போது, ‘‘செய்திகள் குறித்த திருத்தங்களை வெளியிடுவதன் மூலம் எங்கள் பத்திரிகை மீதான வாசகர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது’’ என்றார். தற்போது ‘ரீடர்ஸ் எடிட்டர்’ பொறுப்பை திறம்பட மேற்கொண்டு வரும் ஏ.எஸ்.பன்னீர்செல்வம், பத்திரிகை தர்மத்தை மீறாமல் சமூக வலைதளங்களை அணுகும் வழிமுறைகளை உருவாக்கித் தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார் என்பதையும் தெரிவித்தார்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழில் ‘ஆம்புட்ஸ்மேன்’ என்ற அந்தஸ்தில் அமைந்துள்ள ‘உங்கள் குரல்’ தொழில்நுட்பம் அன்றாடம் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களை உடனுக்குடன் கவனித்து, அவர்கள் கூறும் திருத்தங்களையும், புதிய எண்ணங்களையும் நாளிதழில் அமல்படுத்தி வருவது குறித்து, இந்த மாநாட்டுக்கு வந்த வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x