Published : 20 Oct 2017 09:42 AM
Last Updated : 20 Oct 2017 09:42 AM

பாசனத்துக்காக கொடுமுடியாறு அணையை திறக்க வேண்டும்: நாங்குநேரி எம்எல்ஏ வசந்தகுமார் கோரிக்கை

விவசாயிகளின் நலன் கருதி நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட கொடுமுடியாறு அணையை திறக்க எம்எல்ஏ வசந்தகுமார் கோரிக்கைவிடுத்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமார் நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையில் தற்போது தேவையான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. கொடுமுடியாறு அணை தண்ணீர் மூலம் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பயன்பெறுகின்றன. இந்த அணை தண்ணீரை நம்பியே விவசாயிகள் உள்ளனர்.

நெல், வாழை போன்ற பயிர்களை இத்தருணத்தில் நடவு செய்தால் பயனுள்ளதாக இருக்கும். எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு குடிநீர், கால்நடைகளின் குடிநீர் பயன்பாட்டுக்காக கொடுமுடியாறு அணையை திறந்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் வசந்தகுமார் வலியுறுத்தியுள்ளார்.

நாங்குநேரி தொகுதி கோகிலாம்பாள் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கீழசாலைப்புதூர், களக்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட இடையன்குளம், மீனவன்குளம் மற்றும் கள்ளிகுளம் கிராம மக்கள் தங்கள் பகுதி யில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கு மாறு கோரிக்கை வைத்தனர்.

சொந்த செலவில் மோட்டார்

அவர்களின் கோரிக்கையை ஏற்று அக்கிராமங்களில் சொந்த செலவில் தனித்தனியாக ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள மின்சார பம்ப்களை அளித்து கிணற்றிலிருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீரை ஏற்றி அந்த கிராமங்களுக்கு விநியோகிக்க ஏற்பாடு செய்தார்.

மேலும் பல கிராமங்களில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து மக்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x