Published : 03 Oct 2017 01:35 PM
Last Updated : 03 Oct 2017 01:35 PM

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தை எதிர்த்து வழக்கு: உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க தமிழக அரசு அமைத்த விசாரணை ஆணையத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அரசு அறிவித்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை எதிர்த்து ஜோசப் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அவர், விசாரணை ஆணையம் அமைத்ததில் விதிமீறல் இருப்பதாகக் கூறியுள்ளார்.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜோசப் சார்பில் முத்த வழக்கறிஞர் விஜயன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

முன்னதாக, தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்.22 உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சை பலனின்றி டிச.5 அன்று உயிரிழந்தார். மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த காலகட்டத்தில் அவரை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை.

ஜெயலலிதாவை பார்த்ததாக கூறிய அமைச்சர்களும் பின்னர் நாங்கள் பார்க்கவில்லை என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் உடல் நிலை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு இருந்த சர்க்கரையின் அளவு ஏன் அதிகமாக இருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் அவர் ஏன் முறையாக மருத்துவ சோதனை எடுத்துக்கொள்ளவில்லை. அவருக்கு சிகிச்சை அளித்தது யார். 75 நாட்கள் அப்போலோவில் என்ன வகையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது உள்ளிட்ட பல சந்தேகங்கள் எழுந்தது.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓபிஎஸ் முதல் மு.க.ஸ்டாலின் வரை அனைவரும் நீதி விசாரணை கேட்டனர். இந்நிலையில் கடந்த வாரம் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அறிவித்து உத்தரவிட்டது.

நீதிபதி ஆறுமுகசாமியும் எழிலகத்தில் தனது அலுவலகத்தில் நாளை முதல் பணியை துவக்க உள்ளார். இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x