Published : 25 May 2023 05:11 AM
Last Updated : 25 May 2023 05:11 AM

இபிஎஸ் மகன் அமெரிக்கா சென்றதை அமைச்சர் நிரூபிப்பாரா? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

சென்னை: பழனிசாமியின் மகன் அமெரிக்கா சென்றதை நிரூபிக்காவிட்டால் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டுமென முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தொழில் துறைக்கு முதலீடுகளை ஈர்த்தல் என்ற பெயரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்பச்சுற்றுலா மேற்கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து, தங்கள் ஆட்சி ஊழலை மறைக்க, இதுபோன்ற அவதூறு பரப்பும் வேலைகளில் ஈடுபட வேண்டாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணா இறந்த பிறகு கட்சி சீனியாரிட்டியில் நாவலர், என்.வி.நடராஜன், மதியழகன் ஆகியோருக்குப்பின் இருந்த தற்போதைய முதல்வரின் தந்தை கருணாநிதி எப்படி முதல்வரானார் என்ற வரலாறு அனைவருக்கும் தெரியும்.

எந்தவிதமான உழைப்பும் இல்லாமல், தலைவரின் மகன் என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் தற்போதைய திமுக தலைவர். தன் 45 ஆண்டுகால உழைப்பால், ஒரே இயக்கத்தில் உழைத்து, கிளைச் செயலாளர் பொறுப்பில் இருந்து படிப்படியாக உயர்ந்தவர்தான் பழனிசாமி.

பெரும்பான்மையான சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டு 2017 முதல் 2021 வரை தமிழகத்தின் முதல்வராக திறம்பட ஆட்சி நடத்தியவர். பழனிசாமி முதல்வர் பதவியைவகிப்பதற்கு முன்போ, பதவி வகிக்கும் போதோ அல்லது இன்று வரையோ அவரது மகன் அமெரிக்காவே போகவில்லைஎன்று நான் சவால் விடுகிறேன். இதை முதல்வர் மு.க.ஸ்டாலினோ, அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசுவோ, பழனிசாமி மகன் அமெரிக்கா சென்றார் என்பதை நிரூபிக்க வேண்டும். இல்லாவிடில், ஸ்டாலினும், தங்கம் தென்னரசுவும் தங்களது பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

மக்கள், ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளையும், சந்தேகங்களையும் கட்சியின் பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அவரின் கேள்விகளுக்கு நேரடியான விளக்கத்தை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x