

கழிவுநீர்த் தொட்டி தூய்மைப் பணியில் உயிரிழப்பு: முதல்வர் எச்சரிக்கை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கழிவுநீர்த் தொட்டிகள் மற்றும் பாதாளச் சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முதல்வர், "தமிழ்நாடு பல்வேறு சமூக பொருளாதார குறியீடுகளில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருந்தாலும், ஒரு குறியீட்டில் மட்டும் பின்தங்கிய நிலையில் உள்ளது. அது என்னவென்றால், கழிவு நீர்த் தொட்டிகளைச் சுத்திகரிக்கும்போது, உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கை தான். அது குறித்த செய்திகள் நமக்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றன. அதனைத் தவிர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் இந்த அரசுக்கு உள்ளது.
இனிவரும் காலங்களில் கழிவுநீர்த் தொட்டிகளை சுத்திகரிக்கும் பணிகளின்போது தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறி, அதன் வாயிலாக, இறப்புகள் நேருமானால் அதற்குக் காரணமான அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“திராவிட மாடல் ஆட்சியில் ஊழல் கொடிகட்டி பறக்கிறது” - இபிஎஸ் பேட்டி: சென்னையில் அதிமுக சார்பில் பேரணியாக சென்று திமுக ஆட்சி குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இரண்டு ஆண்டு கால ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்தும், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு குறித்தும், பல்வேறு புகார் குறித்தும் ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளோம். நாங்கள் அளித்த புகாரை பரிசீலனை செய்வதாக ஆளுநர் கூறியுள்ளார்.
திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் கொடிகட்டி பறக்கின்றன. இது தொடர்பாக ஆளுநரிடம் ஆதாரத்துடன் கூறியுள்ளோம். தமிழகத்தில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகள் குறித்தும், மக்கள் படும் அவதிகள் குறித்தும் முழுமையாக ஆளுநரிடம் தெரிவித்து இருக்கிறோம். திமுக அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகள் என்ற தலைப்பில் துறை ரீதியான ஊழல் குற்றச்சாட்டு, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அந்த மனுவில் தெளிவாக கூறியுள்ளோம்" என்றார்.
தஞ்சாவூர் சட்ட விரோத மது விவகாரம்: இருவர் கைது: தஞ்சாவூரில் டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுவை அருந்திய 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மீன் மார்க்கெட் எதிரில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுவை வாங்கி அருந்திய மீன் வியாபாரி குப்புசாமி, கார் ஓட்டுநர் குட்டி விவேக் ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அருந்திய மதுபானத்தில் சயனைடு கலந்திருந்தது தெரியவந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக பார் உரிமையாளரான காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் பழனிவேல் மற்றும் பார் ஊழியர் காமராஜ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், பாரில் சட்டவிரோதாமாக மது விற்பனை செய்த விவகாரத்தை உரிய முறையில் தெரியப்படுத்தவில்லை எனக் கூறி, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சௌந்தர பாண்டியன், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மேலாளர் முருகானந்தம், பணியாளர்கள் திருநாவுக்கரசு, சத்தியசீலன்,பாலு உள்ளிட்ட நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே தமிழகத்தில் சந்துக்கடைகள் மூலம் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 2013-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். இவர் மீதும், இவரது மனைவி ரம்யா மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக, புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் கடந்த 2021-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், புதுக்கோட்டை நீதிமன்றத்தில் 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று தாக்கல் செய்தனர்.
போக்சோ வழக்குகளை ஓர் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும்: புதுவை மாவட்ட முதன்மை அமர்வு திமன்றத்தில் செயல்பட்டு வந்தது. அங்கு போக்சோ வழக்குகளை தலைமை நீதிபதி விசாரித்து தீர்ப்பளித்து வந்தார். இந்நிலையில், போக்சோ வழக்குகளை மட்டும் விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கென தனி நீதிபதியும் நியமிக்கப்பட்டுள்ளார். போக்சோ சிறப்பு நீதிமன்ற திறப்பு விழா திங்கள்கிழமை நடந்தது. இந்த விழாவில் பேசிய சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, காலங்கள் மாறி வருகிறது. காலதாமதமின்றி நீதி வழங்கப்படுகிறது. போக்சோ வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். இவ்வழக்குகளைக் கையாள வழக்கறிஞர்கள் திறமைகளை வளர்த்துக்கொள்வது அவசியம் என்று கூறினார்.
பிரதமருக்கு பிஜி நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு: இந்திய பிரதமர் மோடிக்கு, பிஜி நாட்டின் உயரிய விருதினை அந்நாட்டு பிரதமர் சிதிவேனி ரபுகா திங்கள்கிழமை வழங்கி கவுரவித்தார். பிரதமர் மோடியின் உலகளாவிய தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக பிஜி குடிமகனில்லாத ஒருவருக்கு இந்த கவுரவம் வழங்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து பிரதமர் அலுவலகம் அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இது இந்தியாவுக்கான மிகப் பெரிய கவுரவம். பிரதமர் மோடியின் உலகளாவிய தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக, பிஜி நாட்டின் உயரிய விருதான ‘கம்பானியன் ஆஃப் ஆர்டர் ஆஃப் பிஜி’ என்ற விருதினை பிரதமர் மோடிக்கு வழங்கி பிஜி நாட்டுப் பிரதமர் கவுரவித்திருக்கிறார். இதுவரை பிஜி நாட்டு குடிமகன்களாக இல்லாத ஒரு சிலரே இந்த கவுரவத்தினை பெற்றுள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற கட்டிட விவகாரம்: கார்கே குற்றச்சாட்டு: "பாஜக ஆட்சியில் பெயரளவுக்கு மட்டுமே செயல்படுபவராக, குடியரசுத் தலைவர் மாற்றப்பட்டுள்ளார்" என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்புக்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்படாதது குறித்து கார்கே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "தேர்தல் காரணங்களுக்காக மட்டுமே தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களில் இருந்து இந்தியக் குடியரசுத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதை மோடி தலைமையிலான அரசு உறுதி செய்வது போல் தெரிகிறது.
இந்தியாவின் நாடாளுமன்றம் என்பது இந்திய குடியரசின் உச்சபட்ச சட்ட அமைப்பாகும். குடியரசுத் தலைவர், அதன் உயர்வான அரசியலமைப்பு அதிகாரம் கொண்டவர். அவர் மட்டுமே அரசாங்கம், எதிர்க்கட்சிகள் மற்றும் ஒவ்வொரு குடிமக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவரே இந்தியாவின் முதல்குடிமகர். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை அவர் திறந்து வைப்பது என்பது ஜனநாயக மதிப்புகள், அரசியலமைப்பு உரிமைகள் ஆகியவற்றைக் காப்பதற்கான அரசின் அடையாளமாகும்.
மோடி அரசு தொடர்ந்து உரிமைகளுக்கு மதிப்பளிப்பதில்லை. குடியரசுத் தலைவரின் அலுவலகம் பெயரளவுக்கு மட்டுமே செயல்படும் ஒன்றாக இந்த பாஜக - ஆர்எஸ்எஸ் ஆட்சியில் மாற்றப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
ரூ.2000 நோட்டுகளை மாற்ற அவசரம் காட்ட வேண்டாம்: ரிசர்வ் வங்கி: "2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது, நாணய புழக்கம் தொடர்பான ரிசர்வ் வங்கியின் நிர்வாக நடவடிக்கை. தூய்மையான ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதும், கிழிந்த, எரிந்த, பழுதடைந்த நோட்டுகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் ரிசர்வ் வங்கியின் விதி.
இந்த விதியின் கீழ், குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை, குறிப்பிட்ட காலத்தில் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெறும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதேபோல், இம்முறை ரூ.2000 நோட்டுகள் திரும்பப்பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள 4 மாத கால அவகாசம் இருக்கிறது. எனவே, யாரும் அவசரம் காட்ட வேண்டாம்; வங்கிகளில் குவிய வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் திங்கள் கிழமை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ரூ.2,000 நோட்டுகளை அடையாள ஆவணம் இல்லாமல் மாற்ற அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞரும் பாஜக பிரமுகரமான அஷ்வினி உபாத்யாய் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி சதீஷ் சந்திரா ஷர்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் பட்டியலிடப்பட்டுள்ளது. இது செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்: தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்த மூத்த நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 71. கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சரத்பாபு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், கடந்த ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். இந்த நிலையில், ஹைதராபாத் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையிலிருந்த நடிகர் சரத்பாபுவின் உடல்நிலை திங்கள்கிழமை மோசமடைந்த நிலையில் அவர் உயிரிழந்ததார். அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்ற ஜி 7 மாநாட்டை முடித்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியாவை ஒட்டி உள்ள நாடான பபுவா நியூ கினியாவுக்குச் சென்றார். அங்கு தலைநகர் போர்ட் மோரஸ்பி நகரில் திங்கள் கிழமை நடைபெற்ற இந்தியா - பசுபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் பேசியஅந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராபி, "உலக வல்லரசு நாடுகளின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட நாடாக எங்கள் நாடு உள்ளது. தெற்குலகின் தலைவராக நீங்கள் இருக்கிறீர்கள். சர்வதேச விவகாரங்களில் உங்கள் தலைமையை ஏற்று நாங்கள் பின்தொடருவோம்" என்று தெரிவித்தார். முன்னதாக பிரதமர் மோடியை வரவேற்க ஞாயிற்றுக்கிழமை விமானநிலையம் சென்ற ஜேம்ஸ் மராபி அங்கு அவரின் காலைத் தொட்டு வணங்கி ஆசிர்வாதம் பெற்ற நிகழ்வு பரவலாக பேசப்பட்டது.