செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி
செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி

“திராவிட மாடல் ஆட்சியில் ஊழல் கொடிகட்டி பறக்கிறது” - ஆளுநரிடம் புகார் அளித்த பின்பு இபிஎஸ் பேட்டி

Published on

சென்னை: திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகார் மனு அளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “திராவிட மாடல் ஆட்சியில் ஊழல் கொடிகட்டி பறக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.

சென்னையில் அதிமுக சார்பில் பேரணியாக சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் திமுக ஆட்சி குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"இரண்டு ஆண்டு கால ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்தும், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு குறித்தும், பல்வேறு புகார் குறித்தும் ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளோம். நாங்கள் அளித்த புகாரை பரிசீலனை செய்வதாக ஆளுநர் கூறியுள்ளார்.

திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் கொடிகட்டி பறக்கின்றன. இது தொடர்பாக ஆளுநரிடம் ஆதாரத்துடன் கூறியுள்ளோம். தமிழகத்தில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகள் குறித்தும், மக்கள் படும் அவதிகள் குறித்தும் முழுமையாக ஆளுநரிடம் தெரிவித்து இருக்கிறோம். திமுக அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகள் என்ற தலைப்பில் துறை ரீதியான ஊழல் குற்றச்சாட்டு, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அந்த மனுவில் தெளிவாக கூறியுள்ளோம்.

கிராம நிர்வாக அதிகாரியை மணல் கொள்ளையர்கள் படுகொலை செய்கின்றனர். அரசு ஊழியர்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. கள்ளச் சாராய சாவு, போலி மதுபான சாவு நடந்துள்ளது. தஞ்சாவூரில் டாஸ்மாக் பாரில் காலை 11 மணிக்கு விற்கப்பட்ட மதுவை அருந்திய 2 பேர் மரணம் அடைந்துள்ளனர். மரக்காணம், செங்கல்பட்டு சம்பவத்தை தொடர்ந்து அரசு நடவடிக்கை எடுத்து இருந்தால் நேற்று 2 உயிர்கள் பறிபோய் இருக்காது. பொம்மை முதல்வர், திறமையற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இரண்டு உயிர்களை இழந்து இருக்கிறோம்.

வேங்கைவயல் சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியிவில்லை. இது தொடர்பாக நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரவுடிகளும், குற்றவாளிகளும் காவல் துறையைக் கண்டு பயப்படுவது இல்லை. எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசுதான் இந்த அரசு" என்று அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in