பிரதமர் மோடிக்கு பிஜி நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

பிஜி நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்படும் பிரதமர் மோடி
பிஜி நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்படும் பிரதமர் மோடி
Updated on
2 min read

போர்ட் மோர்ஸ்பி: இந்திய பிரதமர் மோடிக்கு, பிஜி நாட்டின் உயரிய விருதினை அந்நாட்டு பிரதமர் சிதிவேனி ரபுகா திங்கள்கிழமை வழங்கி கவுரவித்தார். பிரதமர் மோடியின் உலகளாவிய தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக பிஜி குடிமகனில்லாத ஒருவருக்கு இந்த கவுரவம் வழங்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து பிரதமர் அலுவலகம் அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இது இந்தியாவுக்கான மிகப் பெரிய கவுரவம். பிரதமர் மோடியின் உலகளாவிய தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக, பிஜி நாட்டின் உயரிய விருதான ‘கம்பானியன் ஆஃப் ஆர்டர் ஆஃப் பிஜி’ என்ற விருதினை பிரதமர் மோடிக்கு வழங்கி பிஜி நாட்டுப் பிரதமர் கவுரவித்திருக்கிறார். இதுவரை பிஜி நாட்டு குடிமகன்களாக இல்லாத ஒரு சிலரே இந்த கவுரவத்தினை பெற்றுள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.

இந்த கவுரவத்தினை இந்திய குடிமக்கள் மற்றும் இருநாடுகளுக்கும் இடையிலான சிறப்பான உறவுகளுக்கு முக்கிய பங்காற்றிவரும் பிஜி - இந்திய சமூகங்களைச் சேர்ந்த தலைமுறையினருக்கும் பிரதமர் மோடி சமர்ப்பிப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

இந்திய - பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் (எஃப்ஐபிஐசி) உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள பிரதமர் மோடி, அதனிடையே பிஜி நாட்டுப் பிரதமர் சிதிவேனி ரபுகாவைச் சந்தித்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "பிஜி பிரதமரைச் சந்தித்ததில் பெரும்மகிழ்ச்சியடைகிறேன். பல்வேறு தலைப்புகளில் நாங்கள் உரையாடினோம். காலத்தின் சோதனையால் பிஜி மற்றும் இந்தியாவுக்கு இடையேயான உறவுகள் நின்றுவிட்டன. வரும் ஆண்டுகளில் அதனை முன்னெடுத்து செல்ல நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட உறுதியேற்றுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி-7 அமைப்பின் உச்சி மாநாடு 19-ம் தேதி தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து இந்திய - பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் (எஃப்ஐபிஐசி) 3-வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி பப்புவா நியூ கினி நாட்டுக்கு சென்றுள்ளார். இன்று நடக்க இருக்கும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொகுத்து வழங்குகிறார். பப்புவா நியூ கினி நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in