Published : 20 May 2023 05:51 AM
Last Updated : 20 May 2023 05:51 AM

தூத்துக்குடி, தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

தொழில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் ரூ.92.50 கோடி மதிப்பில் தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று அடிக்கல் நாட்டினார். உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலர் ச.கிருஷ்ணன் உள்ளிட்டோர்.

சென்னை: தமிழகத்தின் பல்வேறு இடங்களில்,ரூ.1,859 கோடியில் நிறுவப்பட்டுள்ள 16 புதிய துணை மின்நிலையங்களைத் திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு அடிக்கல்லும் நாட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை – புளியந்தோப்பு, தூத்துக்குடி - ஒட்டப்பிடாரத்தில் ரூ.1,718.95 கோடி செலவில் 2 புதிய 400 கிவோ துணை மின் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதுதவிர, அரியலூர் - நடுவலூர், செங்கல்பட்டு - படூர், கிருஷ்ணகிரி - பெண்ணேஸ்வரமடம், மதுரை - தனியாமங்கலம், நீலகிரி – மலர்பெட்டு; சேலம் – நத்தக்கரை, திருவள்ளூர் – அரசூர் ஆகிய இடங்களில் ரூ.94.20 கோடியில் 7 புதிய 110 கிவோ துணை மின்நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

மேலும், செங்கல்பட்டு - புதுப்பாக்கம், சென்னை - ஆழ்வார்திருநகர், காஞ்சிபுரம் - மாத்தூர், புதுக்கோட்டை - நகரப்பட்டி, திருவள்ளூர் - திருமலைவாசன் நகர், திருவாரூர்- அடியக்கமங்கலம், எடமேலையூர் ஆகிய இடங்களில் ரூ.45.97 கோடியில் 7 புதிய 33/11 கி.வோ துணை மின்நிலையங்கள் என ரூ.1,859.12 கோடியில் நிறுவப்பட்டுள்ள 16 புதிய துணை மின் நிலையங்களை நேற்று காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இதுதவிர, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 65 துணைமின் நிலையங்களில் ரூ.143.88 கோடி மதிப்பில் 67 மின் மாற்றிகளின் திறனை கூடுதலாக 853 எம்.வி.ஏ அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இவற்றின் செயல்பாட்டையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வி.செந்தில்பாலாஜி, டி.ஆர்.பி.ராஜா, தலைமைச்செயலர் வெ.இறையன்பு, எரிசக்தித் துறை செயலர் ரமேஷ் சந்த் மீனா, மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, தொடரமைப்புக்கழக மேலாண் இயக்குநர் ஆர்.மணிவண்ணன், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் இயக்குநர் மா.சிவலிங்கராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

3 மாவட்டங்களில் டைடல் பூங்கா: தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், தற்போது 2 மற்றும் 3 -ம் நிலைநகரங்களில், 50 ஆயிரம் சதுர அடி முதல் ஒரு லட்சம் சதுரடி பரப்பில் 7 மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான்-II பகுதியில் 4.16 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூ.32.50 கோடி மதிப்பில், 63,100 சதுர அடியில் 4 தளங்களுடனும், தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டியில் 3.40 ஏக்கர் பரப்பில், ரூ. 30.50 கோடியில் 55 ஆயிரம் சதுரடியில் தரை மற்றும் 3 தளங்களுடனும் டைடல் பூங்காக்கள் கட்டப்படுகின்றன.

சேலம் மாவட்டம், ஓமலூர், ஆணைகெளண்டன்பட்டி மற்றும் கருப்பூர் பகுதிகளை உள்ளடங்கிய பகுதியில் ரூ.29.50 கோடியில் 55 ஆயிரம் சதுரடியில் தரை மற்றும் 3 தளங்கள் கொண்ட மினி டைடல் பூங்கா கட்டப்படவுள்ளது.

இப்பூங்காக்கள் மூலம் தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம் மாவட்டங்கள் மற்றும் அவற்றின் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்துவரும் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டங்களிலேயே தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலை பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, கனிமொழிஎம்.பி., தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தொழில் துறை செயலர் ச.கிருஷ்ணன், டிட்கோ மேலாண் இயக்குநர் ஜெயமுரளிதரன், தொழில்துறை கூடுதல் செயலாளர்மற்றும் டைடல் பூங்கா நிறுவன மேலாண் இயக்குநர் ம. பல்லவிபல்தேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x