Published : 23 Oct 2017 10:14 AM
Last Updated : 23 Oct 2017 10:14 AM

காஸ் சிலிண்டர் கசிவால் தீ விபத்து: கொடுங்கையூரில் ரயில்வே ஊழியர் உட்பட 4 பேர் படுகாயம்

கொடுங்கையூரில் காஸ் சிலிண்டர் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில், ரயில்வே ஊழியர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 125-வது தெருவை சேர்ந்தவர் வெங்கட பிரகாஷ் (55). ரயில்வேயில் தொழில் நுட்ப பிரிவில் பணி செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி கீதா (45), மகள் ‌ஷர்மிளா (25), மகன் கிஷோர் (22) ஆகியோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

நேற்று அதிகாலை 4.20 மணி அளவில் வெங்கட பிரகாசின் வீட்டில் இருந்து குண்டு வெடித்ததுபோல் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. வீடும் தீப்பற்றி எரிந்துள்ளது. கண் இமைக்கும் நேரத்திற்குள் வீட்டின் பக்கவாட்டு சுவர்கள், பால்கனி, மாடிப்படி ஆகியவை இடிந்து விழுந்தன.

வெங்கட பிரகாஷ் உள்பட 4 பேர் உடலிலும் தீப்பற்றிக் கொண்டது. வலியால் துடித்துள்ளனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். உடனடியாக தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். கொடுங்கையூர், எஸ்பிளனேடு உள்ளிட்ட இடங்களில் இருந்து 3 வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதற்கிடையில் கொடுங்கையூர் போலீஸாரும் சம்பவ இடம் விரைந்தனர். காயம் அடைந்த வெங்கட பிரகாஷ், கீதா, சர்மிளா, கிஷோர் ஆகியோரை சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து கொடுங்கையூர் போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.

விபத்து குறித்து, கொடுங்கையூர் போலீஸார் கூறுகையில், "வெங்கட பிரகாஷ் சமையல் அறையில் இருந்த காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு அறை முழுவதும் காஸ் பரவி இருந்துள்ளது. இதை கவனிக்காத வெங்கட பிரகாஷ் நேற்று அதிகாலை மின் விளக்கை ஆண் செய்துள்ளார். இதனால், தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வெங்கட பிரகாஷ் சமையல் அறையில் காற்றோட்டம் ஏதும் இல்லாததால் காஸ் முழுவதும் வீட்டில் பரவி மின் விளக்கை போட்ட உடன் அழுத்தம் தாங்காமல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்றனர்.

பாக்ஸ் செய்தி

கொஞ்சம் கவனமாக இருந்தா போதும் - தீ விபத்தை தடுக்கலாம்

சமையல் எரிவாயு டியூப்பை ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும். ரப்பர் டியூப்புக்கு பதிலாக கடினமான ஆரஞ்சு நிற டியூப் பயன்படுத்தினால் கூடுதல் பாதுகாப்பு. இந்த டியூப்பை எலிகள் கூட கடித்து சேதப்படுத்த முடியாது. தினமும் இரவில் உறங்க போகும்முன் சிலிண்டர் ரெகுலேட்டரை ஆப் செய்தால் 99 சதவீத விபத்துக்களை தடுக்க முடியும். சிலிண்டர் வாங்கும்போது அதனுள் 'வாஸர்' இருக்கிறதா என்பதையும் சோதனை செய்ய வேண்டும். இந்த வாஸர் இல்லையென்றால் ரெகுலேட்டரை மாட்டும்போது எரிவாயு கசிவு வேகமாக ஏற்படும். இதுவும் விபத்துக்கு ஒரு காரணம். இவையெல்லாம் சமையல் எரிவாயு கசிவு ஏற்படாமல் தடுப்பதற்கான வழிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x