Published : 23 Oct 2017 09:48 AM
Last Updated : 23 Oct 2017 09:48 AM

கொசுப்புழு உற்பத்திக்கு காரணமாக இருந்ததாக 2 தனியார் மருத்துவமனைக்கு ரூ.14 லட்சம் அபராதம்: சேலத்தில் அதிகாரிகள் ஆய்வில் அதிரடி நடவடிக்கை

டெங்கு தடுப்புப் பணிகளை மேற்கொள்ளாமல் கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் நிலையில் வைத்திருந்த இரு தனியார் மருத்துவமனைகள் மற்றும் இரு தனியார் நூற்பாலைகளுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

சேலத்தில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று சேலம் சாரதா கல்லூரிச் சாலையில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, மருத்துவமனை வளாகத்தில் இருந்த தண்ணீர்த் தொட்டி, பயன்படாத பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றில் கொசுப் புழுக்கள் இருப்பதும், தண்ணீர்த் தொட்டியில் பாம்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், மருத்துவமனையின் அபாயகரமான மருத்துவக் கழிவுகள் மருத்துவமனை அருகில் உள்ள ஓடையில் கொட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கொசுப்புழு உற்பத்திக்குக் காரணமாக இருந்ததற்காகவும், மருத்துவக் கழிவுகளை அகற்றாமல் இருந்ததற்காகவும் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்ததோடு, மருத்துவமனை குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அதே சாலையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் நடந்த ஆய்வின்போது அங்கும் கொசுப் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ராமகிருஷ்ணா சாலையில் தேநீர் கடை ஒன்றின் குடிநீர் சேமிப்புத் தொட்டியில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு அந்த கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அம்மாப்பேட்டை மண்டலத்தில் மாநகராட்சி உதவி ஆணையர் ஜெயராஜ் தலைமையிலான குழுவினர் காமராஜர் காலனி, தாதம்பட்டி பகுதிகளில் உள்ள நூற்பாலைகளில் நடத்திய ஆய்வில் அங்கிருந்த டிரம்கள், எண்ணெய் கேன்கள் உள்ளிட்டவற்றில் கொசுப் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இரு நூற்பாலைகளுக்கும் தலா ரூ.5 லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சதீஷ் கூறும்போது, ‘சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். சேலம் மாநகராட்சியில் கொசுப்புழு உற்பத்தியாகும் நிலையில் இருந்து வீடுகள் உள்ளிட்டவற்றின் 22 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x