திரும்ப பெறப்படும் ரூ.2,000 நோட்டுகள் முதல் குடிநீர் வாரிய எச்சரிக்கை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ மே 19, 2023

திரும்ப பெறப்படும் ரூ.2,000 நோட்டுகள் முதல் குடிநீர் வாரிய எச்சரிக்கை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ மே 19, 2023
Updated on
3 min read

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.93% தேர்ச்சி: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இதன்படி, மொத்தம் தேர்வு எழுதிய 9,14,320 மாணவ, மாணவியர்களில் 8,35,614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 91.39, இதில் மாணவியர்களின் எண்ணிக்கை 4,30,710. மாணவர்களின் எண்ணிக்கை 4,04,904, மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம் 94.66. மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 88.16. மாணவர்களை விட மாணவியர்கள் 6.50 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10-ம் வகுப்பு முடிவுகள்: கணிதத்தில் 3,649 பேர் சதம்: 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், ஆங்கிலத்தில் 89 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணிதப் பாடத்தில் 3,649 பேரும், அறிவியல் பாடத்தில் 3,584 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 320 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் யாரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறவில்லை.

தமிழகத்தில் மொத்தம் 12,638 பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.45 சதவீதம். அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.24 சதவீதமும், தனியார் பள்ளிகள் 97.38 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.

இந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 10,808 மாற்றுத் திறனாளி மாணவர்கள் எழுதினர். இதில் 9,703 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 89.77. சிறைக் கைதிகளில் தேர்வு எழுதிய 264 பேரில், 112 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 42.42.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு - தமிழகத்தில் 90.93% தேர்ச்சி: தமிழகத்தில் 11-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதன்படி 90.93 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 7,549 பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் 11-ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 84.97 சதவீதம். அரசு உதவி பெறும் பள்ளிகள் 93.20 சதவீதம், தனியார் பள்ளிகள் 97.69 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுகிறது ரிசர்வ் வங்கி: “2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. எனவே, ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23-ம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரை வங்கிகளில் இவ்வாறு வரவு வைக்க முடியும் அல்லது மாற்ற முடியும்.

எந்த ஒரு வங்கிக் கிளையிலும் பணத்தை மாற்றிக் கொள்ள முடியும். இதற்கான வாய்ப்பு வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும். 2,000 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்படவில்லை. அதேநேரத்தில், அவை திரும்பப் பெறப்படுகின்றன. வங்கிகளில் வரவு வைப்பது என்பது வழக்கமாக வரவு வைப்பது போன்றதே. இதில் கட்டுப்பாடுகள் கிடையாது” என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கருப்புப் பணப் புழக்கத்தை மேலும் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மே 21-ல் ஆளுநரைச் சந்திக்கும் தமிழக பாஜக குழு: கோவையில் நடந்த பாஜக செயற்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை, 21-ம் தேதி காலை 10 மணிக்கு, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் குழு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ராஜ்பவனில் சந்திக்கிறோம். தமிழகத்தில் டாஸ்மாக், கள்ளச் சாராயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த விவகாரத்தில் ஆளுநர் நேரடியாக தலையிட வேண்டும் என்றும், அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க முதல்வரை வலியுறுத்துமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஏழுமலையானை தரிசிக்க 2 கி.மீ. தூரத்துக்கு பக்தர்கள் காத்திருப்பு: கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனத்திற்காக காலை கோயிலுக்கு வெளியே நாராயணகிரியை தாண்டி சிலா தோரணம் வரை பக்தர்கள் சுமார் 2 கி.மீ தூரத்துக்கு காத்துக் கிடந்தனர். இதனால், சுவாமியை தரிசிக்க 36 மணி நேரம் வரை ஆனது.

கியான்வாபி மசூதி வழக்கு: உச்ச நீதிமன்றம் தடை: உத்தரப் பிரதேசம் - வாரணாசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியபடி கியான்வாபி மசூதி அமைந்துள்ளது. மசூதியில் நடத்தி முடிக்கப்பட்ட கள ஆய்வில், அங்குள்ள ஒசுகானாவின் நடுவில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. சிவலிங்கத்தின் பழமையை அறிய கார்பன் டேட்டிங் முறையில் பரிசோதனை செய்ய வேண்டுமென்ற 5 இந்து பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.

கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருந்ததற்காக அறிவியல்பூர்வ ஆதாரமில்லை என்று வாரணாசி நீதிமன்றம் கூறியது. இதனை எதிர்த்து அவர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடினர். அலகாபாத் உயர் நீதிமன்ற கார்பன் டேட்டிங் நடத்த அனுமதியளித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, சிவலிங்கத்தின் பழமையை அறியும் வகையில் தொல்லியல் துறை கார்பன் டேட்டிங் நடத்த வேண்டாம் என்று உத்தரவிட்டனர்.

கழிவுநீர்த் தொட்டிக்குள் மனிதர்களை இறங்க அனுமதித்தால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் கழிவுநீர் லாரி இயக்குபவர்கள் கழிவுநீர்த் தொட்டியின் உள்ளே மனிதர்களை இறங்க அனுமதிக்க கூடாது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013, பிரிவு 7-ன்படி, எந்தவொரு நபரும், ஒப்பந்ததாரரும் அல்லது எந்தவொரு நிறுவனமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு நபரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு ஈடுபடுத்தவோ அல்லது பணியமர்த்தவோ கூடாது. அவ்வாறு ஈடுபடுத்தினால், அந்த நபரின் மீது மேற்படி சட்டத்தின் பிரிவு 9-ன்படி முதன் முறையாக மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 2 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். இரண்டாவது முறையாக மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஜி-7 உச்சி மாநாட்டில் ரஷ்யா மீது கூடுதல் தடை விதிக்க வாய்ப்பு: ஜி 7 கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமாவில் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் ஜப்பான் சென்றுள்ளனர்.

ஜி 7 உச்சி மாநாட்டில், முக்கிய நிகழ்வாக வரும் ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரடியாக கலந்து கொள்கிறார். இதனை உக்ரைன் அரசு உறுதிப்படுத்தியுள்ளது. ஜெலன்ஸ்கி கலந்து கொள்வதன் மூலம், ஜி 7 உச்சி மாநாட்டில் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உதகையில் தொடங்கியது 125-வது மலர் கண்காட்சி: நீலகிரியில் கோடை சீசனின் முக்கிய நிகழ்வான உதகை மலர்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த மலர் கண்காட்சியின் சிறப்பம்சமாக 50 ஆயிரம் கார்னேசன் மலர்களால் தேசிய பறவையான மயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 125-வது மலர் கண்காட்சியாக தொடங்கிய இந்த கண்காட்சியில் 20 ஆயிரம் மலர்களால் மாநிலத்தின் விலங்கான வரையாடு, மாநில மலரின் செங்காந்தள் மலர், வண்ணத்துப் பூச்சி, பரத நாட்டிய கலைஞர் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in