Published : 19 May 2023 04:16 AM
Last Updated : 19 May 2023 04:16 AM

ஜல்லிக்கட்டு தீர்ப்பு | பொங்கல் திருநாளில் வெற்றி விழாவாக கொண்டாடுவோம் - முதல்வர், கட்சித் தலைவர்கள் வரவேற்பு

சென்னை: ஜல்லுக்கட்டுக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு அளித்து, பொங்கல் திருநாளில் இதை வெற்றி விழாவாக கொண்டாடுவோம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: தமிழர் வீரத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது, தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கதாகும்.

தமிழக அரசின் சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றிகிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை தற்போது கட்டி வருகிறோம். இந்த ஜல்லிக்கட்டு வெற்றியை வரும் ஜனவரி மாதம் பொங்கல் திருநாளில் வெற்றி விழாவாக கொண்டாடுவோம்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: அதிமுக ஆட்சி காலத்தில் சட்டபேரவையில் நிறைவேற்றிய ஜல்லிக்கட்டு ஆதரவு சட்டத்துக்கு ஒப்புதல் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். ஆட்சிக்குப் பின்பும் அதிமுக தன்னையும் மனுதாரராக இணைத்துக்கொண்டு, எடுத்த அனைத்து சட்டபோராட்டங்களுக்கும் துணைநின்ற அனைவருக்கும் எனது நன்றி.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். இதற்கான சட்டமுன்வடிவை, முதல்வர் என்ற முறையில் தமிழக சட்டப்பேரவையில் நான் முன்மொழிந்ததையும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் நான் முதல்வராக இருந்தபோது இயற்றப்பட்டதையும் எனது பாக்கியமாக கருதுகிறேன். இத்தீர்ப்பு தமிழ் பண்பாட்டுக்கும் கலாச்சாரத்துக்கும் கிடைத்த வெற்றி.

பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை: ஜல்லிக்கட்டின் அனுமதிக்காக, தொடக்கம் முதல் இன்றுவரை யாரேனும் குரல் கொடுத்திருந்தால், அது பிரதமர் மோடியாக தான் இருக்கமுடியும். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: இந்தத் தீர்ப்பின் மூலம்தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபு நிலைநாட்டப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: இந்த வெற்றிக்காகஅனைத்து கட்சியினரும் போராடியது உண்மை தான். இருப்பினும் இந்த மாபெரும் வெற்றி மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தி, உலகையே திரும்பி பார்க்க வைத்த, தமிழக இளைஞர்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: ஜல்லிக்கட்டு போராட்டம், விடுதலைக்குப் பின் தமிழகத்தில் நடைபெற்ற மிக முக்கியமான போராட்டங்களில் ஒன்றாகும். பொதுமக்கள் இணைந்து போராடினால் அநியாயங்களை முறியடிக்க முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

பாமக தலைவர் அன்புமணி: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பல்வேறு வகைகளில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தீர்ப்பின்படி, விலங்குகள் நல அமைப்பு என்ற போர்வையில் செயல்படும் எந்த அமைப்பும் இனி இது குறித்து கேள்வி எழுப்ப முடியாது. இதேபோல நீட் விலக்கு சட்டத்துக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

திக தலைவர் கி.வீரமணி: இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது. வரலாற்றுச் சிறப்புமிக்கது. இது திராவிடர் வரலாற்று தொடர்ச்சியின் அடையாளத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.

மநீம தலைவர் கமல்ஹாசன்: தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதலை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தீர்ப்பு,தமிழரின் கலாச்சாரத்துக்குக் கிடைத்த சட்டப்பூர்வ அங்கீகாரமாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: இத்தீர்ப்பு ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது. இது இளை ஞர்களின் போராட்டத்துக்கும், தமிழக அரசுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இத்தீர்ப்பு தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரமாகும். தமிழக மக்களுக்கு கிடைத்திருக்கும் வெற்றியாகும்.

இதேபோல அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சமக தலைவர் ரா.சரத்குமார், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோரும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x