Published : 01 Oct 2017 10:19 AM
Last Updated : 01 Oct 2017 10:19 AM

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மருத்துவமனைகள் தொடங்க திட்டம்: காஞ்சி காமகோடி பீடம் அறங்காவலர்கள் கூட்டத்தில் முடிவு

காஞ்சி மடத்தின் சார்பில், ‘காஞ்சி காமகோடி பீடம் சாரிடபிள் டிரஸ்ட்’ என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டு அதன்மூலம் பல்வேறு நற்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் அறங்காவலர்கள் கூட்டம் சங்கராச்சாரியார் முன்னிலையில் நடைபெறுவது வழக்கம்.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற காவிரி மகா புஷ்கரம் விழாவில் பங்கேற்றதுடன், காஞ்சி சங்கராச்சாரியார்கள் கடந்த 20 நாட்களாக மயிலாடுதுறையில் தங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், அறக்கட்டளையின் கூட்டத்தை மயிலாடுதுறையில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், காஞ்சி காமகோடி பீடம் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் கூட்டம் மயிலாடுதுறையில் நேற்று நடைபெற்றது.

இதில், அறக்கட்டளையின் புதிய நிர்வாகிகளாக விஸ்வநாதன், சுப்பிரமணியன், கவுரி காமாட்சி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசி வழங்கினார். கூட்டத்தில், நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், காஞ்சி காமகோடி பீடம் அறக்கட்டளை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமுதாய, அறப்பணிகளை விரிவுபடுத்துவது, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, வளர்ச்சி குறைவாக உள்ள இடங்களில் மகப்பேறு மற்றும் தாய்-சேய் நல மருத்துவமனைகள் தொடங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x