Published : 17 May 2023 04:06 AM
Last Updated : 17 May 2023 04:06 AM

டெங்கு பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை - சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், அரசு மருத்துவமனைகளில் போதிய அளவு மருந்துகள் இருப்பில் உள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகத்தில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். எம்எல்ஏ எழிலன் நாகநாதன், சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்ட இயக்குநர் ச.உமா, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரகநலப் பணிகள் இயக்குநர் சண்முககனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கவும், தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும், டெங்கு காய்ச்சல் குறித்து மக்களிடம் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நாடு முழுவதும் தேசிய டெங்கு தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து, பூச்சியியல் ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் காய்ச்சல் சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான ரத்த அணுக்கள், பரிசோதனைக் கருவிகள், மருந்துகள், ரத்தக்கூறுகள் மற்றும் ரத்தம் ஆகியவை போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. எலிசா முறையில் டெங்கு காய்ச்சலைக் கண்டுபிடிக்கும் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 125-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ முறை பாரம்பரிய மருந்துகளான நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு மற்றும் மலைவேம்பு இலைச்சாறு போன்றவை அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

குறும்படம் மற்றும் விளம்பரங்கள் வெளியீடு மூலம், கொசு உற்பத்தியைத் தடுப்பதில் மக்களின் பங்களிப்பு குறித்தும், காய்ச்சலுக்கானசிகிச்சைகள் குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

ஏறத்தாழ 21 ஆயிரம் களப் பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கொசு உற்பத்தியைத் தடுக்கத் தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகள்போதிய அளவில் இருப்பில் உள்ளன. இப்பணிகள் அனைத்துத் துறை அலுவலர்களாலும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில், சிறப்பாகப் பணியாற்றிய சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கொசுப்புழு அழிக்கும் களப் பணியாளர்களுக்குப் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயம் விவகாரம்: கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்ட 66 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 7 பேரும், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஒருவரும், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 55 பேரும், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் 2 பேரும், புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கட்டவர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்குத் தக்க சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும், இறந்தவர்கள் குடும்பங்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 55 பேரும் சிகிச்சை முடிந்து, பூரண நலத்துடன் வீடு திரும்ப ஏதுவாக பொறுப்பு அலுவலர் ஒருவரை நியமிக்க உள்ளோம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

ரத்த அணுக்கள், பரிசோதனைக் கருவிகள், மருந்துகள், ரத்தக்கூறுகள் மற்றும் ரத்தம் ஆகியவை போதிய அளவு இருப்பில் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x