Published : 17 May 2023 04:14 AM
Last Updated : 17 May 2023 04:14 AM

கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் | தலைமை செயலர் 4 வாரத்தில் அறிக்கை தர தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

சென்னை: கள்ளச்சாராயத்தால் நேரிட்ட மரணம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தலைமைச் செயலர் மற்றும் டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி யுள்ளன.

மனித உரிமை மீறல்: மேலும், தமிழகத்தின் கடற்கரை பகுதியில் இருக்கும் மீனவர்களே இந்த மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்திருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு, இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த செய்திகள் உண்மையாக இருப்பின் அது மனித உரிமை மீறலாகும்.

கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் குடிப்பதைத் தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் அரசின் தலைமைச் செயலர் மற்றும் டிஜிபி அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும்.

எடுக்கப்பட்ட நடவடிக்கை: அந்த அறிக்கையில், “முதல் தகவல் அறிக்கை, பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ சிகிச்சைஆகியவற்றின் நிலை என்ன, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு ஏதும் வழங்கப்பட்டதா, இச்சம்பவத்துக்கு காரணமான கடமை தவறிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?”ஆகிய விவரங்கள் இடம்பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x