Last Updated : 14 May, 2023 03:58 PM

66  

Published : 14 May 2023 03:58 PM
Last Updated : 14 May 2023 03:58 PM

கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு திமுக நிர்வாகிகள் ஆதரவு? - போலீசார் குமுறல்

தரணிவேல், சுரேஷ்,சங்கர்

மரக்காணம்: மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 4 பேர் உயிரிழந்த நிலையில், 22 பேர் தொடர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் அமரன் என்பவர் கள்ளச்சாராயம் விற்றதாகவும், அதை சங்கர், சுரேஷ், தரணிவேல், மண்ணாங்கட்டி, ராமமூர்த்தி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் வாங்கி அருந்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் முதலில் சுரேஷ் என்பவர் வாந்தி மயக்கத்தோடு சுருண்டு விழ, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரியை அடுத்த காலப்பட்டில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிறிது நேரம் கழித்து சங்கர் மற்றும் தரணிவேலுவும் சுருண்டு விழ இவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஊர் முழுவதும் சாராயம் அருந்தியவர்கள் ஆங்காங்கே மயங்கிவிழ அவர்களும் ஜிப்மர் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே சிகிச்சைப் பெற்றுவந்த சுரேஷ், சங்கர் மற்றும் தரணிவேல் மற்றும் ராஜமூர்த்தி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மண்ணாங்கட்டி என்பவர் கவலைக்கிடமான நிலையில் இருந்தார். எஞ்சிய 22 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

தகவல் அறிந்த வடக்கு மண்டல ஐஜி கண்ணன் மற்றும் விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா ஆகியோர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக கலவரம் ஏதும் ஏற்படாமல் இருக்க 300க்கும் மேற்பட்ட போலீஸார் எக்கியார்குப்பத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், எக்கியார் கிராம மக்கள் கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய காவல்துறையைக் கண்டித்து கிழக்குக் கடற்கரை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளச்சாராய சம்பவத்தைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய விசாரணையில், கள்ளச்சாராய வியபாரி அமரன் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், மொத்த சாராய வியாபாரியான முத்து என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். உயிரிழந்த 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன.

திமுகவினரின் நெருக்கடி - போலீஸார் குமுறல்: மரக்காணத்தில் கள்ளச்சாரயம் அருந்திய 3 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவி ஆய்வாளர்கள் தீபன் மற்றும் சிவகுருநாதன், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் மரியா உள்ளிட்ட 4 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு.

இந்த நிலையில், மரக்காணத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் பேசியபோது, "கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த துறை ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு சிலரை பிடித்தால், அவர்களை விடுவிக்கக் கோரி திமுக நிர்வாகிகளே போலீசாரை வற்புறுத்துகின்றனர். அதோடு, போலீசாரை தரக்குறைவாகவும் அவர்கள் பேசுகின்றனர். இதனால் எங்களுக்கு மரியாதையும் இல்லை; பாதுகாப்பும் இல்லை. இதே நிலைதான் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ளன" என ஆதங்கத்தோடு பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x