Last Updated : 30 Oct, 2017 10:24 AM

 

Published : 30 Oct 2017 10:24 AM
Last Updated : 30 Oct 2017 10:24 AM

இலவச பட்டா பெறும் பயனாளிகளுக்கு பிரதமரின் குடியிருப்பு திட்டத்தில் வீடு

தமிழக அரசின் இலவச பட்டா பெறுபவர்களுக்கு பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின்கீழ் வீடு கட்டித்தரும் நடவடிக்கையில் ஊரக வளர்ச்சித் துறை இறங்கியுள்ளது.

மத்திய அரசு செயல்படுத்தி வந்த பங்களிப்பு வீட்டு வசதி திட்டமான இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், கடந்த 2016-17 முதல், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்) என மாற்றி அமைக்கப்பட்டது. புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தரமான, பேரிடர்களை தாங்கக்கூடிய வீடுகளை பயனாளிகளால் கட்டப்படுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

சமூக பொருளாதார கணக்கெடுப்பு பட்டியல் 2011-ன்படி கிராம சபை மூலம் பயனாளிகள் கண்டறியப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றனர். இத்திட்டத்தில் 60 சதவீதம் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கும், 40 சதவீதம் இதர பிரிவினருக்கும் ஒதுக்கப்பட வேண்டும். இவற்றில் 3 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வீடு ஒவ்வொன்றும் 269 சதுரடி பரப்பில் கட்டப்படுகிறது.

ஒரு வீட்டுக்கு மத்திய அரசு ரூ.72 ஆயிரம், மாநில அரசு ரூ.48 ஆயிரம் என ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதுதவிர, தமிழக அரசு கான்கிரீட் மேற்கூரை அமைக்க ரூ.50 ஆயிரம் கூடுதல் நிதியை வழங்குகிறது. இதன்படி, தமிழகத்தில் பிரதமர் குடியிருப்பு திட்டத்தில் ஒரு வீட்டுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் தற்போது 3 லட்சம் வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மத்திய அரசும் தமிழக அரசும் இணைந்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் வழங்குவதுடன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஒவ்வொரு பயனாளிக்கும் தினக்கூலி அடிப்படையில் 100 நாட்களுக்கான ஊதியம் ரூ.16 ஆயிரம் வழங்கப்படுகிறது. தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்காக ரூ.18 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சத்து 2 ஆயிரம் கிடைக்கிறது. இத்தொகை, ‘ஜியோ டேகிங்’ எனும் முறையில் செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, கட்டுமானத்தின் அளவுக்கேற்ப பயனாளிகளின் வங்கிக்கணக்கில் மத்திய அரசே வரவு வைக்கிறது.

இத்திட்டத்தில், கடந்த 2016-17ல் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 338 வீடுகள் கட்டுவதற்கு ரூ.2 ஆயிரத்து 997 கோடியே 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. 2017-18ம் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 214 வீடுகள் ரூ.2 ஆயிரத்து 213 கோடியே 64 லட்சத்தில் கட்டப்படுகிறது. மேலும், வருவாய்த் துறை சார்பில் இலவச பட்டா வழங்கப்படும் பயனாளிகள் பட்டியலைக் கொண்டு அவர்களில் தகுதியானவர்களை பிரதமரின் குடியிருப்பு திட்டத்தில் இணைத்து, வீடுகளை கட்டித் தரும் திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரூ.1,516 கோடி ஒதுக்கீடு

உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்து ஓராண்டாகிவிட்டது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், ஊரக வளர்ச்சித் துறையின் முயற்சியால், உள்ளாட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிதி ரூ.1,516 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதுகுறித்து உள்ளாட்சித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மத்திய அரசு இந்த ஆண்டுக்கு ரூ.1,516 கோடியை விடுவித்துள்ளது. இதில், ஏப்ரல் முதல் அக்டோபர் வரை ரூ.1,320 கோடியே 57 லட்சம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை அடுத்தடுத்து விடுவிக்கப்படும். இதுதவிர அடுத்த ஆண்டுக்கு ரூ.1,753 கோடி, அதன்பின் ரூ.2,369 கோடியை மத்திய அரசு ஒதுக்கும். கடந்த ஆண்டு வறட்சி பாதிப்பு இருந்ததால், உள்ளாட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை குடிநீர் திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது மழை வந்துள்ளதால் விரைவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x