Published : 26 Oct 2017 08:19 AM
Last Updated : 26 Oct 2017 08:19 AM

சென்னையில் இருந்து கோவா, அந்தமான், ஷீரடி செல்ல உள்நாட்டு விமான சுற்றுலா அறிமுகம்: ஐஆர்சிடிசி அறிவிப்பு

மக்களின் வரவேற்பையடுத்து சென்னையில் இருந்து கோவா, அந்தமான், ஷீரடி செல்ல உள்நாட்டு விமான சுற்றுலாவை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது.

இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) பாரத தர்ஷன் சுற்றுலா, ரயில் சுற்றுலா, பள்ளி கல்லூரிகளுக்கான கல்விச் சுற்றுலா, கார் போக்குவரத்து சேவைகள் போன்றவற்றை நடத்தி வருகிறது. இதற்கிடையே, வெளிநாட்டு விமான சுற்றுலா மக்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், உள்நாட்டு விமான சுற்றுலாவை அறிவித்துள்ளது.

நல்ல வரவேற்பு

இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் நேற்று கூறியதாவது: இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகம் மூலம் ரயில் மட்டுமல்லாது, விமானம் மூலமாகவும் சென்னையிலிருந்து பல்வேறு சுற்றுலாத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு விமான சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்தது, பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது உள்நாட்டு விமான சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

சென்னையில் இருந்து கோவா உட்பட 3 இடங்களுக்கு சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்துள்ளோம். சென்னையில் இருந்து விமானம், கோவாவுக்கு (4 நாட்கள்) வரும் நவம்பர் 23-ம் தேதியும், அந்தமானுக்கு (5 நாட்கள்) வரும் டிசம்பர் 26-ம் தேதியும் புறப்படுகிறது. கோவாவுக்கு ரூ.17,800, அந்தமானுக்கு ரூ.32,350 என ஒரு நபருக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல், சென்னையில் இருந்து விமானம், ஷீரடிக்கு (2 நாட்கள்) அனைத்து சனிக்கிழமைகளிலும் இயக்கப்படுகிறது. ஒரு நபருக்கு ரூ.10,500 என கட்டணமாக வசூலிக்கப்படும். விமான கட்டணம், ஹோட்டலில் தங்கும் வசதி, ஏசி வாகனம், உணவு உள்ளிட்டவை இதில் அடங்கும். மேலும், தகவல் பெற 9003140673, 9003024169 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x