Published : 15 Oct 2017 09:12 AM
Last Updated : 15 Oct 2017 09:12 AM

தனியார் மருத்துவமனை செவிலியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிக வாபஸ்: அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு

அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையின் உடன்பாடு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழுவினர் பரிந்துரைகளின்படி தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு குறைந்தபட்சம் மாத ஊதியமாக ரூ.20 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.34 ஆயிரமும் வழங்க வேண்டும். அரசு செவிலியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தில் கடந்த 11-ம் தேதி குளோபல் செவிலியர்கள் அமைப்பின் சார்பில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் என தமிழகம் முழுவதும் பல தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் திடீரென்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். அன்றைய தினம் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், நேற்று முன்தினம் மூன்றாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் நோயாளிகள் அவதிப்படத் தொடங்கினர்.

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை

இதையடுத்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் உள்ள தொழிலாளர் நலத்துத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் பகல் 3.30 மணி தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெற்றது. தொழிலாளர் இணை ஆணையர் அ.யாஸ்மின் பேகம் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் குளோபல் செவிலியர் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகத்தினர், டிஎம்எஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

இதுதொடர்பாக குளோபல் செவிலியர்கள் அமைப்பின் துணைத் தலைவர் ஜி.உதயகுமார் கூறியதாவது:

இந்தியாவில் செவிலியர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. குழுவின் பரிந்துரைகளை கேரளா, மகாராஷ்டிரா மாநிலத்தில் அமல்படுத்தப்பட உள்ளது. ஆனால், தமிழகத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் நாங்கள் முறைப்படி தெரிவித்துவிட்டு வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டோம். இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் போது அரசு தரப்பில், குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது தெரிவித்தனர்.

அதேபோல் தனியார் மருத்துவமனைகளின் தரப்பில் கலந்துக் கொண்டவர்கள், செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதாக உறுதி அளித்தனர். அதனால் எங்களுடைய வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தெரிவித்தோம். இரவே அனைத்து செவிலியர்களும் பணிக்கு திரும்பினர்.

இவ்வாறு ஜி.உதயகுமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x