Last Updated : 12 May, 2023 01:03 PM

11  

Published : 12 May 2023 01:03 PM
Last Updated : 12 May 2023 01:03 PM

உச்சநீதிமன்றத் தீர்ப்பு | கருத்து சொல்ல விரும்பவில்லை என தமிழிசை பேட்டி - மகிழ்ச்சி என ரங்கசாமி கருத்து

ஆளுநர் தமிழிசை | முதல்வர் ரங்கசாமி : கோப்புப் படங்கள்

புதுச்சேரி: டெல்லி அரசு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு அனைத்து யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தாது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இத்தீர்ப்பு மகிழ்ச்சி தருவதாக முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

டெல்லி ஆளுநரைவிட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இதேபோன்ற விவகாரம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில், அரசுக்கும் அப்போதைய துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு இடையே எழுந்து விஸ்வரூபம் எடுத்தது. தற்போது புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி உள்ளது. துணை நிலை ஆளுநராக தமிழிசையும், முதல்வராக ரங்கசாமியும் உள்ளனர். மாநில அந்தஸ்து இருந்தால்தான் புதுச்சேரியால் வளர்ச்சி அடைய முடியும் என்று முதல்வர் ரங்கசாமி வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் துணை நிலை ஆளுநர் தமிழிசையிடம் டெல்லி அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக கேட்டதற்கு, "அது டெல்லி அரசுக்கு வழிமுறை சொல்லியிருக்கிறார்கள். தலைநகர் என்பதால் அதற்கென்று கருத்து உள்ளது. ஒவ்வொரு யூனியன் பிரதேசமும் வெவ்வேறு தான். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதம். எல்லாமே மக்களுக்கானது தான். நீதிமன்றத் தீர்ப்பில் கருத்து சொல்ல விரும்பவில்லை" என்றார்.

டெல்லி யூனியன் பிரதேசத்துக்கான தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும் தானே என்று கேட்டதற்கு, "இத்தீர்ப்பு அனைத்து யூனியன் பிரதேசத்துக்கும் பொருந்தாது. ஆளுநர்கள் தான் அதிகாரம் படைத்தவர்கள் என்று நாங்கள் சொல்வதில்லை. முக்கியமாக நான் சொல்வதில்லை. அன்பால்தான் ஆள்கிறோம்" என்று குறிப்பிட்டார்.

தீர்ப்பு தொடர்பாக முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு, "மக்களால் தேர்வான அரசுக்குத்தான் அதிகாரம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி தருகிறது. இதைதான் நாங்கள் வலியுறுத்தி வந்தோம். இத்தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்துமா என்பதற்கு தீர்ப்பை படித்து பார்த்தால்தான் முழுமையாக தெரியும்" என முதல்வர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x