Last Updated : 12 May, 2023 12:00 AM

 

Published : 12 May 2023 12:00 AM
Last Updated : 12 May 2023 12:00 AM

மே மூன்றாவது வாரத்தில் 46-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி -  ஆட்சியர் தகவல்

ஏற்காடு கோடை விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடந்தது. 

சேலம்: ‘சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி மே மூன்றாவது வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக’ மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், ஏற்காடு 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடந்தது. இதில் ஆட்சியர் கார்மேகம் பேசியது: சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மே மூன்றாவது வாரத்தில் ஏற்காடு 46வது கோடை விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி, பழக்கண்காட்சி மற்றும் காய்கறிக் கண்காட்சிகளும் அமைக்கப்படவுள்ளது. மேலும், அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்துறை பணிவிளக்க முகாம் நடத்தப்படவுள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கொழு கொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் படகு போட்டிகள் நடத்தப்படவுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செல்லப் பிராணிகள் (நாய்கள்) கண்காட்சி, கலைப் பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஒருங்கிணைந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.

ஏற்காடுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கோடைவிழா நடைபெறும் நாட்களில் இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. இளைஞர்களுக்கான கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், கபாடி, கயறு இழுத்தல், மாரத்தான் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பாலச்சந்தர், சேலம் எஸ்பி சிவகுமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x