

தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம்: தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா வியாழக்கிழமை காலை பதவியேற்றுக் கொண்டார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
மேலும் தமிழக அமைச்சரவையில் சில அமைச்சர்களின் இலாக்காக்களும் மாற்றப்பட்டுள்ளன. நிதித்துறை, அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சர் டிஆர்பி ராஜாவிற்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் மனோ தங்கராஜு-க்கு பால் வளத்துறை அளிக்கப்பட்டுள்ளது. அவரிடமிருந்த தகவல் தொழில்நுட்பத் துறை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சாமி நாதனுக்கு தமிழ் வளர்ச்சி துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
நிர்வாகக் காரணங்களுக்காகவே துறைகள் மாற்றம்’: ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தமிழகத்தில் ரூ.20,000 கோடி முதலீடு செய்வது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், மின்னூர்திகள் தயாரிப்பில் தற்போது தமிழகம் முன்னணி மாநிலமாக உருவாகியுள்ளது. நிர்வாகக் காரணங்களுக்காக அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள டி.ஆர்.பி ராஜா சிறப்பாக செயல்பட்டு அதிக முதலீட்டை ஈர்ப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைச்சர்களின் இலாக்காக்கள் மாறினாலும், தமிழக அரசு தொழில்துறையினருக்கு அளித்து வரும் ஆதரவும், தொழில் வளர்ச்சிக்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும் என்றும் தொடரும்" என்று தெரிவித்தார்.
மிகச் சிறப்பான அமைச்சராக டிஆர்பி ராஜா செயல்பட வேண்டும்: தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா பதவியேற்றுக் கொண்டார். இதுகுறித்து திமுக பொருளாளரும், டிஆர்பி ராஜாவின் தந்தையுமான டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் பேசுகையில், "முதல்வரின் எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றி மிக சிறப்பான அமைச்சர் என்ற பெயரை அவர் எடுக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், நிதி அமைச்சராக இருந்த 2 ஆண்டுகள் என் வாழ்க்கையில் மிகச் சிறப்பான பகுதி என்றும், தகவல் தொழில்நுட்பத் துறையை வழங்கிய முதல்வருக்கு நன்றி என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஜிப்மரில் உயர் சிகிச்சைக்கான கட்டண அறிவிப்பு ஒத்திவைப்பு: ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வராதோர் மற்றும் சிவப்பு ரேஷன் கார்டு இல்லாத நோயாளிகளுக்கு உயர் சிகிச்சைகளுக்கு கட்டணம் பெறும் அறிவிப்பை ஜிப்மர் ஒத்திவைத்துள்ளது. மொத்தம் 63 வகையான உயர் சிகிச்சைகளுக்கு ரூ.500 முதல் ரூ. 12 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் கட்டண அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை.
இதனிடையே "கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி வைத்திருக்கும் ஜிப்மர் நிர்வாகம், போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நியமனம் செய்வதற்கும், அவ்வாறு நியமனம் செய்யப்படுகிறவர்கள் தமிழ் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
ஓபிஎஸ்ஸும் டிடிவி தினகரனும் துரோகிகள் - இபிஎஸ்: ஓ பன்னீர் செல்வமும் டிடிவி தினகரனும் துரோகிகள் என்று அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் ஓபிஎஸ்-டிடிவி தினகரன் இணைந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "மாயமானும் மண்குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளன. பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான். இப்படித்தான் இருக்கும் அவர்களின் இணைப்பு. இரண்டு துரோகிகளும் ஒன்றாக சேர்ந்து ஒரு அணியை உருவாக்குவதாகக் கூறி உள்ளார்கள்" என்று தெரிவித்தார்.
மோக்கா புயல்: ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம்: "மோக்கா" புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம் எழுதி உள்ளது. இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய வானிலை ஆய்வு மையம், வியாழக்கிழமை வெளிட்டுள்ள அறிவிக்கையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம், தீவிர புயலாக மாறி வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது மேலும், அதி தீவிர புயலாக உருவெடுத்து மத்திய வங்கக்கடல் பகுதியினை ஞாயிற்றுக்கிழமை அன்று வங்க தேசம் மற்றும் மியான்மருக்கு இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு எச்சரிக்கையின்படி, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மீன்வளத் துறை ஆணையருக்கும், கடலோர மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சென்னை பெருநகர ஆணையருக்கும் விளக்கமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மீனவர்கள், படகுகள், விசைப்படகுகள், பயணியர்கள் வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் வரும் 14ம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கடலுக்குள் சென்ற மீன்பிடி படகுகள் விரைவாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது." என்று கூறப்பட்டுள்ளது.
‘உத்தவ் தாக்கரேவை மீண்டும் முதல்வராக்க முடியாது’: நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளாமல் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால், அவரை மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்த முடியாது என்று 5 பேர் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. மேலும் நபம் ரெபியா வழக்கு தீர்ப்பை கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது. சிவசேனா பிளவு தொடர்பான வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வு இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
நிர்வாக சேவைகளில் மாநில அரசுக்கே அதிகாரம் - உச்ச நீதிமன்றம்: டெல்லி யூனியன் பிரதேசத்தின் நிர்வாக சேவைகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிகாரம் உண்டு என்றும், அதன் முடிவுக்கு மாநில ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்றும் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. டெல்லியின் நிர்வாக சேவைகள் உள்ளிட்டவற்றில் மாநில அரசு மற்றும் ஆளுநருக்கு உள்ள அதிகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு ஆம் ஆத்மி அரசுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஹெரிட்டேஜ் வீதியில் வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் குறைந்த தீவிரம் கொண்ட குண்டு ஒன்று வெடித்தது. கடந்த 5 நாட்களில் அந்த பகுதியில் நடந்த 3வது குண்டுவெடிப்பு சம்பவம் இதுவாகும். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். முதல் குண்டுவெடிப்பு மே 6ம் தேதி நிகழ்ந்தது. இரண்டாவது குண்டு வெடிப்பு கடந்த திங்கள் கிழமை நிகழ்ந்தது. இவை அனைத்தும் பொற்கோவிலில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள ஹெரிட்டேஜ் வீதியில் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீன ஜிகாத் பிரிவு தளபதி பலி: காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீன ஜிகாத் பிரிவின் தளபதி உட்பட 27 பேர் பலியாகியுள்ளனர். காசாவின் தென் பகுதியில் உள்ள பாலஸ்தீன ஜிகாத் அமைப்பின் கட்டிடங்களில் வியாழக்கிழமை காலை வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் இதுவரை காசா பகுதியில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 60க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலனவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறப்படுகின்றது.