

அமிர்தசரஸ்: பஞ்சாபில் உள்ள பொற்கோயில் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 5 பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.
5 நாட்களில் 3 குண்டுவெடிப்புகள்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஹெரிட்டேஜ் வீதியில் வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் குறைந்த தீவிரம் கொண்ட குண்டு ஒன்று வெடித்தது. கடந்த 5 நாட்களில் அந்த பகுதியில் நடந்த 3வது குண்டுவெடிப்பு சம்பவம் இதுவாகும். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பஞ்சாப் டிஜிபி தகவல்: இதுகுறித்து பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அமிர்தசரஸில் நடந்த குறைந்த தீவிரம் கொண்ட குண்டு வெடிப்பு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப் முதல்வரின் வழிகாட்டுதலின்படி, மாநிலத்தில் அமைதியை போலீசார் ஏற்படுத்துவர்" என்று தெரிவித்துள்ளார்.
ஒரே வாரத்தில் 3வது குண்டுவெடிப்பு: முதல் குண்டுவெடிப்பு மே 6ம் தேதி நிகழ்ந்தது. இரண்டாவது குண்டு வெடிப்பு கடந்த திங்கள் கிழமை நிகழ்ந்தது. இவை அனைத்தும் பொற்கோவிலில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள ஹெரிட்டேஜ் வீதியில் நடந்துள்ளன. இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையும், பஞ்சாப் போலீஸாரும் தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக வெளியான முதல் தகவல்களின் படி, இந்த குண்டு வெடிப்புகளுக்கு தொலைவில் இருந்து தூண்டும் விசைப்பொறிகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. அமிர்தசரஸ் ஹெரிட்டேஜ் வீதியில் நடந்த இரண்டு குண்டு வெடிப்புகளுக்கும் வெடிபொருள்கள் குளிர்பான கேனில் வைத்து வீசப்பட்டுள்ளன.
திங்கள்கிழமை நடந்த இரண்டாவது குண்டுவெடிப்பில் ஒருவர் காயமடைந்தார். இந்த குண்டுவெடிப்புகளில் டெட்டனேட்டர் ஏதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், குழப்பத்தை விளைவிக்கும் வகையிலேயே இந்த குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.