Last Updated : 11 May, 2023 06:28 PM

 

Published : 11 May 2023 06:28 PM
Last Updated : 11 May 2023 06:28 PM

இரண்டாண்டு திமுக ஆட்சியில் ஊழல் நடந்து உள்ளதால் அமைச்சரவையில் மாற்றம் - இபிஎஸ் குற்றச்சாட்டு 

சேலத்தில் இபிஎஸ்

சேலம்: ''திமுக இரண்டாண்டு ஆட்சியில் ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் செய்ததுதான் இவர்களது சாதனை. இந்த ஊழலால் தான் தற்போது அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது'' என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டி பேசியுள்ளார்.

சேலம், ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ''ஓபிஎஸ் - டிடிவி தினகரன் ஒன்றிணைந்திருப்பது, மாயமானும், மண்குதிரையுமாக ஒன்று சேர்ந்துள்ளனர். பூஜ்ஜியத்துடன் பூஜ்ஜியம் சேர்வதால் எவ்விதப் பலனுமில்லை. இவ்வகையில் தான் இவர்களின் இணைப்பு உள்ளது. 'டிடிவி தினகரன் ஒரு துரோகி,' என ஓபிஎஸ் கூறிவந்தார். அதேபோல, டிடிவி தினகரன், 'ஓபிஎஸ்-ஐ துரோகி' என சாடினார். தற்போது, இவ்விரு துரோகிகளும் ஒன்றிணைந்து ஒரு அணியை உருவாக்கியுள்ளனர். டிடிவி தினகரனின் கூடாரம் காலி ஆகிவிட்டது, அதில் ஒட்டகம் புகுந்த நிலையாக தற்போது ஓபிஎஸ் புகுந்துள்ளார்.

ஓபிஎஸ்-டிடிவி தினகரன் சந்திப்பை பண்ருட்டி ராமச்சந்திரன் பெருமையாக பேசியுள்ளார். பண்ருட்டியைப் பொறுத்தவரை அவர் சார்ந்திருந்த எந்தக் கட்சிக்கும் விசுவாசமாக இருந்ததில்லை. அவரை எம்ஜிஆரே கண்டித்துள்ளார். ஜெயலலிதா இருக்கும் போதே அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர். பாமக, தேமுதிக என பல கட்சிகளுக்குச் சென்றவர் தான் பண்ருட்டி ராமச்சந்திரன். அவர் எங்கு சென்றாலும் அந்தக் கட்சி அழிந்துவிடும்.

கிரிக்கெட் மேட்ச் பார்க்கச் சென்ற ஓபிஎஸ், ஸ்டாலின் மருமகன் சபரீசனை சந்தித்துப் பேசி உள்ளார். ஓபிஎஸ், திமுக-வுக்கு பி டீமாக செயல்படுகிறார் என்பது இப்போது உண்மையாகிவிட்டது. இரண்டாண்டு திமுக ஆட்சியில் ஊழல் நடந்து உள்ளதால் அமைச்சரவையில் மாற்றம் செய்திருக்கிறார்கள். ஒரே ஒரு ஆடியோவில் அரசு ஆடிப் போய்விட்டது. திமுக ஆட்சியில் எல்லாத் துறையிலும் ஊழல் நடந்திருக்கிறது. இதற்கு சான்றாகத் தான் நிதி அமைச்சரை தற்போது, தகவல் தொழில்நுட்ப அமைச்சராக மாற்றப்பட்டிருக்கிறார். இன்னும் நிறைய ஆடியோக்கள் வரும் என சொல்லி இருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளில் திமுக செய்த சாதனை ரூ. 30 ஆயிரம் கோடி ஊழல் தான். இன்னும் நிறைய உண்மைகள் வெளிவரும் என்பதால் தான், பழனிவேல் தியாகராஜனை அமைச்சரவையிலிருந்து நீக்காமல் உள்ளனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தல் வேட்பு மனுவில் சொத்துக்களை குறைத்துக் காட்டியதாக குற்றம்சாட்டியுள்ளது, என்னை அரசியல் ரீதியாக எதுவும் செய்ய முடியவில்லை , இதனால், மிலானி என்ற திமுக கட்சியைச் சேர்ந்தவர் மூலமாக என் மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். அதை சட்டப்படி சந்திப்போம். வருவாய் குறைவாக காட்டியுள்ளதாக தெரிவித்திருக்கிறார். என்ன இருக்கிறதோ அதைத் தான் காட்டியுள்ளேன். நான் எந்த தொழிலும் செய்யவில்லை விவசாயம் மட்டும் தான் செய்கிறேன். எந்த சொத்தையும் மறைக்கவில்லை. குறிப்பாக என் மீது எந்த சொத்தும் இல்லை. நான் இதுவரை என் பெயரில் எந்த சொத்தையும் வாங்கவில்லை.

இது முழுக்க முழுக்க விதிமீறல் வழக்கு. எந்த விதிமுறை இருந்தாலும் ஓராண்டுக்குள் வழக்கு தொடர வேண்டும். ஆனால், இரண்டு ஆண்டு முடியும் நிலையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த வழக்கு என் தொகுதியான, எடப்பாடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தான் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், சேலத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, இதனை சட்டப்படி சந்திப்பேன். திமுக ஆட்சியில் நடக்கும் ஊழல்களை ஆளுநர் தெளிவாக சுட்டிக் காட்டுகிறார். அதனால் தான் அவர் மீது திமுக-வினருக்கு கோபம் வருகிறது.

இதுபற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெளிவாக தெரிவித்திருக்கிறார். ஓபிஎஸ் அணியிலுள்ள வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், பிரபாகரன் ஆகியோர் வந்தால் கட்சியில் இணைத்துக் கொள்வது என்பது சாத்தியமில்லை. கழகத்துக்கு ஊறு விளைவிப்பவர்களை எப்பொழுதும் கட்சியில் சேர்த்துக் கொள்ள மாட்டோம், தொண்டர்கள் என்ன கருதுகிறார்களோ அதைத் தான் கட்சி செய்யும். நிறைய பேர் கட்சியில் இணைந்து வருகிறார்கள். அதிமுக என்பது எங்கள் தரப்பிற்கு வந்துவிட்டது. ஓபிஎஸ் எங்கு வேண்டுமானாலும் மாநாடு போடட்டும் கவலையில்லை. தேர்தல் ஆணையத்தின் மூலமும், நீதிமன்றம் மூலமும் எங்களுக்கு அதிமுக கட்சி கிடைத்துள்ளது.'' இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x