Published : 09 Oct 2017 03:10 PM
Last Updated : 09 Oct 2017 03:10 PM

அதிமுக ஆட்சியே ஒரு டெங்கு ஆட்சிதான்: அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு ஸ்டாலின் பதிலடி

டெங்குவை விட கொடியது திமுக என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். இந்நிலையில் இந்த ஆட்சியே ஒரு டெங்கு ஆட்சிதான் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''கேரளாவில் பிராம்மணரல்லாத பிற சாதியினரும் கோயில்களில் அர்ச்சகராக பணியாற்ற சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு அதை செயல்படுத்தாமல் இருக்கிறது.

இந்தியாவிலேயே முதன்முதலில் தலைவர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி நடந்தபோதுதான் தமிழ்நாட்டில் அதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டது. நீதிமன்றத்தில் சில பிரச்சினைகள் வந்தபோது, அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக முறையாக உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இங்கு செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், கேரள முதல்வர் அதனை நிறைவேற்றி இருப்பது உள்ளபடியே பாராட்டுக்குரியது.

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த காலதாமதத்துக்குக் காரணமே, எடப்பாடி பழனிசாமி தரப்பு கால அவகாசம் கேட்டிருப்பதுதான். இதை எப்படியாவது நீட்டித்து, ஆட்சியில் இருந்து கொள்ளையடிக்க அவர்கள் திட்டமிடுகிறார்கள். இந்த காலதாமதம் குதிரை பேரத்துக்கு மட்டுமல்ல, கொள்ளையடிப்பதற்கும் வழி வகுக்கும். ஆனால், காலம் தாழ்ந்து கிடைத்தாலும், நீதி நிச்சயம் வெல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கும் இருக்கிறது.இந்த ஆட்சி நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை நீடிக்கும்.

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கெயில் திட்டத்தை எதிர்த்துப் போராடுவோம் என்று இப்போது அறிவிப்பது முரண்பாடானது என்று பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்து இருக்கிறார். அவர் எப்போதுமே முரண்பாடாகத்தான் எல்லாவற்றையும் சொல்லி வருகிறார். விவசாயப் பெருங்குடி மக்களை, விவசாய நிலங்களை பாதிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் கெயில் உள்ளிட்ட எந்தவொரு திட்டமாக இருந்தாலும் திமுக எதிர்க்கும். நெடுஞ்சாலைகளின் அருகில் பைப்லைன் அமைப்பதை நாங்கள் வரவேற்கிறோம். எனவே, விவசாய நிலங்கள் வழியாக அவற்றைக் கொண்டு வரும் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை.

டெங்குவை விட கொடியது திமுக என்று அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்திருக்கிறார். இந்த ஆட்சியே ஒரு டெங்கு ஆட்சிதான்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x