Published : 09 May 2023 06:53 AM
Last Updated : 09 May 2023 06:53 AM

கொடைக்கானலில் களைகட்டியது கோடை சீசன் - பூத்துக் குலுங்கும் பல வண்ண ரோஜா மலர்கள்

கொடைக்கானல் ரோஜா தோட்டத்தில் பூத்துள்ள சிவப்பு நிற ரோஜாக்கள்.

கொடைக்கானல்: கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், கொடைக்கானல் ரோஸ் கார்டனில் பல வண்ணங்களில் ரோஜாக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் இடமாக ரோஸ் கார்டன் உள்ளது. கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் தோட்டக்கலைத் துறையினர் மூலம் பராமரிக்கப்படும் இந்த கார்டனில், பல்வேறு வகையான ரோஜாக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்த ரோஸ் கார்டனில், மொத்தம் 10 ஏக்கரில் 1,500 வகையான 16,000 செடிகள் உள்ளன. இந்த செடிகளை பராமரிப்பதற்கு என பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பல வண்ணங்களில்: கோடை சீசனான மே மாதத்தில், ரோஸ் கார்டனில் பல்வேறு வகையான ரோஜா பூக்கள் பூத்துக் குலுங்குவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை, பழுப்பு நிறம் என பல வண்ணங்களில் ரோஜா பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

தற்போது, கொடைக்கானலில் குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் ரோஜா பூக்களை பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

முதியவர்கள், கர்ப்பிணிகளுக்கு..: சுற்றுலாப் பயணிகளை கவர செயற்கை நீர்வீழ்ச்சி, பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. முதியவர்கள், கர்ப்பிணிகள் பேட்டரி கார் மூலம் பூங்காவை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலை அலுவலர் பார்த்தசாரதி கூறியதாவது: கோடை சீசனை முன்னிட்டு தற்போது ரோஜா செடிகளில் பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன. மலர் கண்காட்சியின்போது, அனைத்து செடிகளிலும் பல வண்ணங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x