Published : 09 May 2023 12:55 AM
Last Updated : 09 May 2023 12:55 AM

கரூர் - கோவை 4 வழிச்சாலை பணி ஓராண்டில் முடிக்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

கரூர்: கரூர் - கோவை 4 வழிச்சாலை பணி ஓராண்டில முடிக்கப்படும் என தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் பொதுப்பணித்துறை கட்டடங்கள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஆகியோர் தலைமையில் நேற்று (மே 8ம் தேதி) நடைபெற்றது.

ஆட்சியர் த.பிரபுசங்கர், எஸ்.பி. ஏ.சுந்தரவதனம், எம்எல்ஏக்கள் குளித்தலை ரா.மாணிக்கம், அரவக்குறிச்சி ரா.இளங்கோ, கிருஷ்ணராயபுரம் க.சிவகாமசுந்தரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக கரூர் நீதிமன்ற வளாகம் அருகே அமைச்சர் எ.வ.வேலு மரக்கன்றுகளை நட்டார்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு கூறியது, "கரூர் மாவட்டம் கோயம்பள்ளி அமராவதி ஆற்றில் கடந்த ஆட்சியில் ரூ.13.70 கோடியில் பாலம் கட்டப்பட்டது. ஆனால், அணுகுசாலை அமைக்காததால் பல ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. அணுகுசாலை பணிக்காக 6 கிராமங்களில் 10 கி.மீட்டருக்கு நிலம் எடுப்பு பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்கப்பட உள்ளது.

கரூர் சுற்றுச்சாலை அமைப்பது தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்துள்ளதால் முன்னுரிமை அளித்து சுற்றுச்சாலைக்கான திட்டமதிப்பீடு தயார் செய்து நில எடுப்பு ஆயத்தப்பணிகள் தொடங்க உள்ளன. இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலை இரு வழிச்சாலையாக உள்ளது. ஆனால் வாகன செறிவு அதிகம் உள்ள சாலை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டிருக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாடு மாநில அரசிடம் இருந்தாலும் நிதி ஒதுக்கீடு மத்திய அரசு செய்ய வேண்டும்.

கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கரூரில் இருந்து கரூர் மாவட்ட எல்லையான வைரமடை வரை 26 கி.மீட்டருக்கு ரூ.137 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் (டெண்டர்) கோரப்பட்டுள்து. கரூர் - கோவை 4 வழிச்சாலை பணிகள் ஓராண்டில் முடிக்கப்படும். கரூர் பேருந்து நிலையம் அருகே நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) அமைக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கரூர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

அங்கிருந்து ஆட்சியர் அலுவலகம் வருகிற சாலையை விரிவாக்கம் செய்து, சாக்கடை கட்ட வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். அவரது கோரிக்கையை மனுவாக அளிக்க கூறியுள்ளேன். தொழில் மற்றும் சங்க கால நகரமான கரூர் மாவட்ட வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x