

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - அரசுப் பள்ளிகளில் 89.80% தேர்ச்சி: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. இதில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 94.03% ஆகும். இந்தத் தேர்வில் 47,934 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன்19-ம் தேதி முதல் துணைத்தேர்வுகள் நடைபெறுகிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 4.93 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவியர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 05 ஆயிரத்து 753. தேர்ச்சி சதவீதம் 96.38. தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 49 ஆயிரத்து 697. தேர்ச்சி சதவீதம் 91.45.
7,533 பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 89.80 சதவீதம். 2,767 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 326.
பாடவாரியாக தேர்ச்சி விகிதம் - கணினி அறிவியலில் உச்சம்: பாடவாரியான தேர்ச்சி விகிதத்தில் கணினி அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 99.29 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியல் பாட பிரிவுகளில் 96.32 சதவீதம் பேரும், வணிகவியல் பாடப்பிரிவுகளில் 91.63 சதவீதம் பேரும், கலைப் பிரிவுகளில் 81.89 சதவீதம் பேரும், தொழிற்பாடப் பிரிவுகளில் 82.11 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழில் 2, ஆங்கிலத்தில் 15, இயற்பியலில்-812, வேதியியலில்-3,909, உயிரியலில்-1,494, கணிதத்தில்-690, தாவரவியலில் -340, விலங்கியலில்-154, கணினி அறிவியலில்-4,618, வணிகவியலில்-5,678, கணக்குப்பதிவியலில்-6,573, பொருளியலில்-1,760, கணினிப் பயன்பாடுகள் பாடத்தில் -4051, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியலில் 1,334 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் ராணிப்பேட்டை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 97.85 சதவீத தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. 97.79 சதவீதத்துடன் திருப்பூர் 2-வது இடத்தையும், 97.59 சதவீதத்துடன் பெரம்பலூர் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. 87.30 சதவீதத்துடன் ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
இந்த முறை தேர்வெழுதிய சிறைவாசிகள் 90 பேரில் 79 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்படி, 87.78 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்றுத் திறனாளிகள் 4,398 பேர் தேர்வு எழுதினர். இதில் 3,923 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 89.20 ஆகும்.
பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 600 - சாதித்த நந்தினி!: பிளஸ் 2 தேர்வில் திண்டுக்கலைச் சேர்ந்த மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவி நந்தினி, தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியில், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என்று என்று 6 பாடங்களிலும் நூற்றுக்கு நூறு முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். "படிப்பு தான் சொத்து என்று நினைத்து படித்தேன்" என்று அவர் கூறினார்.
நாமக்கல், பள்ளிப்பாளையம் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த திருநங்கை மாணவி ஸ்ரேயா, +2 பொதுத் தேர்வில் வணிகவியல் பிரிவில் 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். பிளஸ் 2 தேர்வில் தமிழத்தில், தேர்ச்சி பெற்ற ஒரே திருநங்கை இவர் தான்.
மே 13 வரை மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்: பிளஸ் 2 மாணவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் 13-ம் தேதி வரை மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது. மேலும், மே 12 முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் வழியாகவும், மதிப்பெண் பட்டியலை (Statement of Marks) பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘நம்பிக்கையுடன் முன்னேறி உலகை வெல்லுங்கள்’: பிளஸ் 2 மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,"பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று வாழ்க்கையின் மிக முக்கியக் கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்.
இந்த முறை தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளர வேண்டாம். வெற்றிக்கு இன்னும் ஒரு அடிதான். நீங்களும் விரைவில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். நமது அரசு 'நான் முதல்வன் திட்டம்' உள்ளிட்ட திட்டங்களை உங்கள் உயர்கல்விக்கு வழிகாட்ட வகுத்திருக்கிறது.நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள்! உலகை வெல்லுங்கள்!" என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், தங்களது பிள்ளைகளின் மதிப்பெண் குறித்து சக மாணவர்களுடன் ஒப்பிட்டு பேசக் கூடாது என்று பெற்றோர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளார்.
சோனியா மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்: கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ‘கர்நாடக இறையாண்மை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்திய சோனியா காந்தி மீது நடவடிக்கை எடுத்து, காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் மனு அளித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தின் ஹுப்ளியில் சனிக்கிழமை நடந்த காங்கிரஸ் பிரச்சார பேரணிக் கூட்டத்தில், பேசிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி," கர்நாடகாவின் நற்பெயர், இறையாண்மை, ஒற்றுமைக்கு கலங்கம் ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி ஒருவரையும் அனுமதிக்காது" என்று கூறியிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்படிருந்தது. இதன் அடிப்படையில் பாஜக புகார் அளித்துள்ளது.
இதற்கிடையில் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அரசியல் சாசனத்தில் மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான வழிவகை இல்லை. அதனாலேயே முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இட ஒதுக்கீட்டை கர்நாடகா பாஜக ரத்து செய்துள்ளது”என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, கர்நாடகாவில் ஓபிசி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட இந்த இடஒதுக்கீடு வொக்கலிகாக்கள் மற்றும் லிங்காயத்து சமூகங்களுக்கு தலா 2 சதவீதம் என்று பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய போர் விமானம்: இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் ஒன்று ராஜஸ்தானின் ஹனுமன்கர் பகுதியில் திங்கள்கிழமை விழுந்து நொறுங்கியதில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். வழக்கமான பயிற்சிக்காக சூரத்கர் பகுதியில் இருந்து புறப்பட்ட விபத்துக்குள்ளான விமானம், ஹனுமன்கர் மாவட்டத்துக்குள் நுழைந்த போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானியின் கட்டுப்பாட்டில் இருந்து விலகிய விமானம் பலோல்நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பாராசூட் உதவியுடன் விமானி வெளியேறிவிட்டதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடமாநில தொழிலாளர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் காட்டம்: வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக போலியான தகவல்களை பரப்பிய வழக்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யூடியூபர் மணீஷ் காஷ்யப்பின் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மணீஷ் காஷ்யப் தன் மீது பிஹார் மற்றும் தமிழகத்தில் பதியப்பட்ட 3 வெவ்வேறு எஃப் ஐஆர்களையும் ஒன்றாக இணைக்க வேண்டும், தன் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "நீங்கள் போலி வீடியோக்களை உருவாக்குவீர்கள். நாங்கள் அதற்கு செவி சாய்க்க வேண்டுமா? தமிழகம் போன்ற நிலையான மாநிலத்தில் நீங்கள் பிரச்சினையை உருவாக்க முயன்றுள்ளீர்கள்" என்று கூறி அவரது மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
கேரளா படகு விபத்து பலி 22 ஆக அதிகரிப்பு: கேரள மாநிலம் மலப்புரத்தில் 40 பேருடன் சென்ற சுற்றுலா படகு ஒன்று கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், நான்கு குழந்தைகள் உட்பட 22 பேர் உயிழந்துள்ளனர். மலப்புரத்தின் தானூர் பகுதியில் ஞாயிறு நடந் விபத்து நடந்துள்ளது. சுற்றுலா படகில் அதிகம் பேர் பயணம் செய்தது படகு கவிழ்ந்ததற்கான காரணமாக சொல்லப்படுகிறது. இரண்டு அடுக்கு கொண்ட அந்தப் படகின் கீழ் பகுதியில் இருந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.