Published : 07 May 2023 07:04 AM
Last Updated : 07 May 2023 07:04 AM

தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள மணல் குழிகளை மூட வேண்டும் - அரசுக்கு அன்புமணி கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள மணல் குழிகளை உடனடியாக மூட அரசு முன்வர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் காவிரி, கொள்ளிடம், வைப்பாறு, வெள்ளாறு உள்ளிட்ட 9 ஆறுகளில் மொத்தம் 25 மணல் குழிகள் திறக்கப்படுகின்றன. அவற்றில் 7.51 லட்சம் அலகுகள் மணல் வெட்டியெடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் கொள்ளிடம் ஆற்றில் மட்டும் 11 மணல் குழிகள் திறக்கப்படுகின்றன. இவ்வளவு மணல் குழிகள் திறக்கப்படுவதும், அதில் எல்லையில்லாத அளவுக்கு மணல் அள்ளப்படுவதும் சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் சரி செய்யவே முடியாத அளவுக்கு கேட்டை ஏற்படுத்தி விடும்.

கேரளத்தில் மணல் அள்ள தடையும், கர்நாடகத்தில் மணல் அள்ள கட்டுப்பாடுகளும் உள்ளன. ஆனாலும், அந்த மாநிலங்களில் கட்டுமானப் பணிகள் தடைபடாமல் நடக்கிறது. தமிழக அரசு நினைத்தால் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதியை அதிகரிப்பது, செயற்கை மணல் உற்பத்தி ஆகியவற்றின் மூலம் மணல் தேவையை பூர்த்தி செய்யலாம்.

மதுவைப் போலவே மணல் குழிகளும் அழிவு சக்திகள்தான். அதனால் கிடைக்கும் வருவாயைவிட, ஏற்படும் இழப்புகள் பல மடங்கு அதிகம். மணலுக்காக இன்னும் ஆறுகளை ஓட்டையிட்டுக் கொண்டிருக்கக் கூடாது. மணலுக்கான மாற்று வழிகளை பயன்படுத்திக் கொண்டு, தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள மணல் குழிகளை உடனடியாக மூட அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x