Last Updated : 06 Sep, 2017 11:02 AM

 

Published : 06 Sep 2017 11:02 AM
Last Updated : 06 Sep 2017 11:02 AM

சிறப்புச் செய்தி: காந்தி மார்க்கெட் கடைகளை கள்ளிக்குடிக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு, உண்ணாவிரதம்

காந்தி மார்க்கெட் கடைகளை கள்ளிக்குடியில் அமைக்கப்பட்டுள்ள மத்திய வணிக வளாகத்துக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து நேற்று வியாபாரிகள் கடைகளை அடைத்து, உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மத்திய வணிக வளாகத்தில் வசதிகள் இல்லை என வியாபாரிகளும், மாநகரின் வளர்ச்சிக்கு கடைகளை மாற்றுவது அவசியம் என அதிகாரிகளும் தெரிவித்தனர்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடியில் அமைக்கப்பட்டுள்ள காய்கறிகள், பழங்கள், மலர்களுக்கான மத்திய வணிக வளாகத்தை முதல்வர் பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.

கள்ளிக்குடிக்கு கடைகளை மாற்ற எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த காந்தி மார்க்கெட் வியாபாரிகள், நேற்று மத்திய வணிக வளாகம் திறப்பதைக் கண்டித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் கடைகளில் கருப்புக் கொடி கட்டி கடையடைப்பில் ஈடுபட்டதுடன், சுமார் 1,500 பேர் உண்ணாவிரதமும் இருந்தனர். இதனால், காந்தி மார்க்கெட், சப் ஜெயில் ரோடு, தஞ்சாவூர் சாலை, வாழைக்காய் மண்டி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, வெறிச்சோடி காணப்பட்டன.

தீராத நெருக்கடி- குறையாத குப்பை

திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடைகள், தரைக் கடைகள் என சுமார் 3,500 கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுக்கு வெளியூர் மற்றும் உள்ளூரில் இருந்து தினமும் 300-க்கும் அதிகமான லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களில் விற்பனைக்காக சரக்குகள் கொண்டு வரப்படுகின்றன.

இதனால், இந்தப் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதனால், மக்கள் பல்வேறு வகைகளில் சிரமத்துக்கு ஆளாகி வரும் அதே சமயம், இங்கு அள்ள அள்ள குறையாத குப்பையை கையாள்வதில் மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

புதிய இடத்தில் கடைகள்

எனவே, இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், மாநில வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடியில் ரூ.77 கோடியில் காய்கறிகள், பழங்கள், மலர்களுக்கான மத்திய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.

இங்கு தரைத்தளம், முதல் தளம் என்று மொத்தம் 1,000 கடைகள் கட்டப்பட்டுள்ளன. பழங்கள், காய்கறிகளை பாதுகாத்து வைக்க 3 குளிர்ப்பதன கிடங்குகள்- ஜெனரேட்டர்கள், சரக்குகளை தரம் பிரிக்க 2 களங்கள், சரக்குகளை கடைகளுக்கு ஏற்றி இறக்குவதற்காக ரூ.5.51 கோடியில் மின் தூக்கிகள்(லிப்ட்), தலா 250 கேவி திறன் கொண்ட 2 மின் மாற்றிகள், 24 மணி நேரமும் மின்சாரம் இருக்கும் வகையில் 50 கேவி மின்சாரம் பெறுவதற்காக சூரியஒளி சக்தி மின் தகடுகள், கழிப்பிடம், குடிநீர் வசதி, விவசாயிகள் மற்றும் சுமைத் தொழிலாளர்கள் ஓய்விடம், உணவகம், வாகன நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், வங்கிக் கிளை, ஏடிஎம் மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வசதிகள் இல்லை: வியாபாரிகள்

ஆனால், காந்தி மார்க்கெட்டிலிருந்து மத்திய வணிக வளாகத்துக்கு கடைகளை மாற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலப் பொருளாளர் கோவிந்தராஜூலு கூறியது: காந்தி மார்க்கெட்டுக்குள் சென்று வர 12 வழிகள் உள்ளன. இது, அனைத்துத் தரப்பினருக்கும் பயனாக உள்ளது. ஆனால், கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்துக்கு 2 வழிகள் மட்டுமே உள்ளன. காந்தி மார்க்கெட்டில் 600 சதுர அடி முதல் 1,200 சதுர அடி அளவில் கடைகள் உள்ள நிலையில், அங்கு 100 சதுர அடி அளவில் மட்டுமே கட்டப்பட்டுள்ள கடைக்குள் எப்படி வணிகம் செய்ய முடியும்.

நாட்டில் எங்குமே இல்லாத வகையில் கள்ளிக்குடியில் முதல் தளத்தில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கேட்டால் லிப்ட் இருப்பதாகக் கூறுகின்றனர். காந்தி மார்க்கெட்டுக்கு லாரிகளில் வரும் சரக்கு மூட்டைகள், சுமைத் தொழிலாளர்கள் மூலம் நேராக கடைக்குள்ளேயே இறக்கிவைக்க முடியும். ஆனால், கள்ளிக்குடியில் லாரியில் இருந்து இறக்கி லிப்டில் ஏற்றி, கடைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் பல்வேறு நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும். மேலும், திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையையொட்டி இந்த மத்திய வணிக வளாகம் அமைந்துள்ளதால், விபத்து அபாயம் உள்ளது.

காந்தி மார்க்கெட்டில் சுமார் 3,500 கடைகள் உள்ள நிலையில், கள்ளிக்குடியில் உள்ள 1,000 கடைகளை எந்த அடிப்படையில், யாருக்கு அளிக்கவுள்ளனர், யாரையெல்லாம் அப்புறப்படுத்தவுள்ளனர் என்று தெரியவில்லை.

வியாபாரிகளை ஏமாற்றும் ஆட்சியாளர்களும், அரசும், எங்களுக்குத் தேவையில்லை. மக்களுக்கு உதவி செய்வதாகக் கூறி எங்களை கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்துக்குக் கொண்டு சென்று அடைக்க வேண்டாம் என்றார்.

மகளிர் சிறையை மாற்றலாம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலப் பொருளாளர் கோவிந்தராஜூலு மேலும் கூறும்போது, “காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அரசு நினைத்தால், காந்தி மார்க்கெட் அருகில் உள்ள மகளிர் சிறையை கள்ளிக்குடிக்கு மாற்றிவிட்டு, அந்த இடத்தில் காந்தி மார்க்கெட் கடைகளை விரிவுபடுத்தித் தரலாம்” என்றார்.

வளர்ச்சி அவசியம்: அதிகாரிகள்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்களில் விசாரித்தபோது அவர்கள் கூறியது:

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி அங்கீகாரம் பெற்ற 209 மொத்த விற்பனை கடைகள், 228 சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. தினமும் சுமார் 300 லாரி உள்ளிட்ட வாகனங்களில் சரக்குகள் ஏற்றி வரப்படுகின்றன. சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளை மாற்றும் நோக்கில்தான் கள்ளிக்குடியில் மத்திய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், முதல் கட்டமாக மொத்த விற்பனை கடைகளை மட்டுமே கள்ளிக்குடிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக சில்லறை விற்பனை கடைகளை மாற்றுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்

தற்போது, முதல் கட்டமாக தரைத் தளத்தில் உள்ள 500 கடைகள் மட்டுமே வியாபாரிகளுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. மொத்த வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, 2 கடைகளுக்கு நடுவில் உள்ள சுவரை அகற்றி ஒரு கடையாக மாற்றி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் நிறுத்துமிடத்துக்காக மத்திய வணிக வளாகத்துக்கு அருகில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 7.2 ஏக்கர் நிலத்தை பெறும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தில் உள்ளது. அதேபோல, இங்கு உருவாகும் காய்கறி கழிவுகளை சேகரித்து வைக்க 6 ஏக்கரில் குப்பைக்கிடங்கு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வியாபாரிகளின் சிறிய கோரிக்கைகளையும் பரிசீலித்து உரிய வசதிகளை ஏற்படுத்தித் தர தயாராகவே உள்ளோம் என்றனர்.

போக்குவரத்து நெரிசல் குறையும்

காந்தி மார்க்கெட் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் போலீஸார் கூறும்போது, “காந்தி மார்க்கெட் கடைகளை கள்ளிக்குடிக்கு இடம் மாற்றுவதன் மூலம் மாநகருக்குள் சரக்கு வாகனங்கள் வருகை குறைந்து, போக்குவரத்து நெரிசல் முழுமையாக குறையும்” என்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் அய்யாரப்பன் கூறும்போது, “திருச்சி மாநகரில் காந்தி மார்க்கெட் பகுதியில் தான் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். தவிர, அங்கு சேரும் குப்பைகளால் எந்நேரமும் துர்நாற்றமும், சுகாதாரக் கேடும் நேரிடுகிறது.

எனவே, காந்தி மார்க்கெட் கடைகளை கள்ளிக்குடிக்கு இடம் மாற்றுவதே அனைவருக்கும் நல்லது” என்றார்.

ஸ்மார்ட் சிட்டிக்கு அவசியம்

அதிகாரிகள் தரப்பில் மேலும் கூறும்போது, “மாநகராட்சிக்கு சொந்தமான காந்தி மார்க்கெட், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ள தேவைப்படுகிறது. எனவே, பல ஆண்டுகளாக காந்தி மார்க்கெட் பகுதியில் வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள், தற்போது மாநகரின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் கடைகளை மாற்றிக் கொள்ள

முன் வர வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x