Published : 03 May 2023 05:35 PM
Last Updated : 03 May 2023 05:35 PM

கோயில் திருவிழாக்களில் விபத்துகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கை: ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: கோயில் திருவிழாக்களின்போது, விபத்துகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடைமுறைகளை விழா ஏற்பாட்டாளர்கள் வகுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக, தகரத்திலான தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. மின் விளக்குகளுக்காக போடப்பட்டிருந்த ஒயர்கள் அறுந்து தகர பந்தலின்மீது விழுந்ததில், அங்கு நின்றிருந்த ராணி, பச்சையம்மாள், முருகன், ரவி உள்ளிட்ட 6 பேர் பரிதபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில், 37 பேர் படுகாயமடைந்து செஞ்சி மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, விழாவுக்கு ஒலி ஒளி ஏற்பாடு செய்திருந்த ராஜா மற்றும் அவரது ஊழியர்கள் 5 பேர் மீது வளத்தி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், ராஜாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2016ம் ஆண்டு தீர்ப்பளித்தது, வழக்கிலிருந்து மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த தீர்ப்பை ரத்து செய்து தன்னை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி, "மின் திருட்டு குற்றச்சாட்டில் கோயில் நிர்வாகிகளும், அறங்காவலர்களும் பொறுப்பாகி இருக்க வேண்டிய நிலையில், குற்றப்பத்திரிகையில் அவர்கள் சேர்க்கப்படாமல், ஒலி ஒளி அமைப்பாளர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை பொருத்தவரை, மரணம் விளைவிக்கும் நோக்கத்துடன் ராஜா செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு நிரூபணம் ஆகவில்லை. கவனக்குறைவாக மரணம் ஏற்படுத்தியதாகத்தான் கூறமுடியும் எனக் கூறி, 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து, ஏற்கெனவே சிறையில் இருந்த 119 நாட்கள் சிறை தண்டனையே போதுமானது என தீர்ப்பளித்துள்ளார். அதேசமயம், 30 ஆயிரம் ரூபாய் அபராதத்தை உறுதி செய்தும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மேலும், கோயில் திருவிழாக்களின்போது விபத்துகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடைமுறைகளை விழா ஏற்பாட்டாளர்கள் வகுக்க வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x