Published : 03 May 2023 04:58 AM
Last Updated : 03 May 2023 04:58 AM

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 5 பெரிய நிறுவனங்கள் தொழில் தொடங்க ஒப்புதல்

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் | படம்: ட்விட்டர்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், கேட்டர்பில்லர், பெட்ரோனாஸ் உள்ளிட்ட 5 தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு விழா, பட்ஜெட் அறிவிப்புகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

தமிழக பொருளாதாரத்தை வரும் 2030-ல் ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், வரும் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த முடிவெடுத்து, அதற்கானஅடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு, வெளிநாட்டு நிறுவனங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள், தேவைகளை நிறைவேற்ற வேண்டும். இதற்கு அமைச்சரவை கூடி முடிவெடுக்க வேண்டியது அவசியம்.

இதுதவிர, சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. தொடர்ந்து, துறைகள் வாரியாக நடந்த மானியக்கோரிக்கையிலும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதற்கு தேவையான நிதி ஆதாரங்கள் குறித்தும் பொதுவாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. இதில், துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் இறையன்பு, தொழில் துறை செயலர் கிருஷ்ணன், நிதித் துறை செயலர் முருகானந்தம், பொதுத் துறை செயலர் ஜகந்நாதன் மற்றும் உதயச்சந்திரன் உள்ளிட்ட முதல்வரின் செயலர்களும் பங்கேற்றனர்.

இக்கூட்டம் ஒரு மணி நேரம் நடைபெற்றது. முதலில் தொழில் துறை தொடர்பான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. சமீபத்தில் ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பயணம் மேற்கொண்டு, பல்வேறு தொழில் முதலீட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், அந்த நாடுகளின் தொழில் வர்த்தக அமைச்சர்கள், கூட்டமைப்புகளுடனும் முதலீடு தொடர்பாக பேசியுள்ளார். இந்த தகவல்கள் அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டு, ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

5 நிறுவனங்களுக்கு அனுமதி

தொடர்ந்து, கேட்டர்பில்லர், பெட்ரோனாஸ் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடுசெய்ய விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அதற்கான அனுமதிகளை வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதவிர, முதல்வர் இம்மாத இறுதியில் அரசுமுறை பயணமாக லண்டன், சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார். தொடர்ந்து அமைச்சர்களும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்கின்றனர். அதற்கான ஏற்பாடுகள், தொழில் புரிந்துணர்வு ஒப்பந்த முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா, அவரது பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி தொடங்க உள்ளது. இதைத் தொடர்ந்து, ஜூன் 5-ம் தேதி சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்கிறார். அதே நாளில் சென்னையில் நடைபெறும் கருணாநிதி நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிகளை நடத்துவது, திருவாரூரில் கலைஞர் அருங்காட்சியகம் திறப்பு விழா, ஓராண்டுக்கு அரசு சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடுவது குறித்தும் அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டு, அமைச்சர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை முதல்வர் வழங்கியுள்ளார்.

இதுதவிர, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகைஉள்ளிட்ட திட்டங்கள், துறைகள்தோறும் வெளியிடப்பட்ட திட்ட அறிவிப்புகளுக்கான நிதியை உறுதிப்படுத்தும் வகையிலும் ஆலோசனை நடத்தப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, திமுக சார்பில்2 ஆண்டு சாதனை விளக்கபொதுக்கூட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு சார்பில் 2 ஆண்டு சாதனைகள், திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துக்கூறுவது தொடர்பாகவும் பல்வேறு ஆலோசனைகளை முதல்வர் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x