Published : 23 Sep 2017 09:54 AM
Last Updated : 23 Sep 2017 09:54 AM

கொடுங்கையூரில் ரூ.255 கோடி மதிப்பீட்டில் கழிவுநீரை சுத்திகரிக்கும் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் ரூ.255 கோடியில் கொடுங்கையூரில் செயல்படுத்தப்பட உள்ள கழிவுநீரை சுத்திகரித்து, எண்ணூரில் உள்ள தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு அனுப்பும் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னையில் பருவமழை பொய்க்கும்போதெல்லாம், கடும் வறட்சி ஏற்பட்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதுபோன்ற நேரங்களில் தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவும் கழிவுநீரால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுகாதாரக் கேடுகள் ஏற்படுவதை தடுக்கவும் சென்னை மாநகரில் உருவாகும் கழிவுநீரை சுத்திகரித்து, அதை தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு வழங்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

சவ்வூடு பரவல் முறை

அதற்கான நிலையத்தை, ரூ.255 கோடி செலவில், கொடுங்கையூரில் அமைக்க உள்ளது. இந்த நிலையத்தின் மூலம் தினமும் 45 மில்லியன் லிட்டர் கழிவுநீர், எதிர்மறை சவ்வூடு பரவல் முறையில் சுத்திகரித்து, அதை எண்ணூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கும் தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு வழங்க உள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை கொண்டு செல்ல 800 மிமீ விட்டம் முதல் 300 மிமீ விட்டம் வரையிலான குழாய்கள், சுமார் 28.5 கிமீ நீளத்துக்கு பதிக்கப்பட உள்ளன.

இந்த குழாய், எண்ணூர் கழிமுக பகுதியின் குறுக்கே பதிக்கப்பட இருப்பதாலும், எதிர்மறை சவ்வூடு பரவலின்போது வெளியேற்றப்படும் நீரை பக்கிங்ஹாம் கால்வாயில் விடவும், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் கீழ் சுற்றுச்சூழல் அனுமதி கோரி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம், சென்னை குடிநீர் வாரியம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில் இத்திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x