Last Updated : 08 Sep, 2017 11:22 AM

 

Published : 08 Sep 2017 11:22 AM
Last Updated : 08 Sep 2017 11:22 AM

திரும்பும் திசையெங்கும் அச்சுறுத்தும் அரசு கட்டுமானங்கள்: முன்கூட்டியே எச்சரித்தும் நடவடிக்கை இல்லை - பொதுமக்கள் வேதனை

‘பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது எதிர்பாராத சம்பவம் அல்ல, பல ஆண்டுகளாக எச்சரித்தும் கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவுதான் 5 உயிர்களை பலி வாங்கியுள்ளது. இதற்கு உள்ளாட்சி, மாவட்ட நிர்வாகங்கள் பொறுப்பேற்க வேண்டும்’ என சோமனூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சோமனூரில் 1998-ல் ரூ.30 லட்சம் மதிப்பில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டது. 2000-வது ஆண்டில் தான் கட்டுமானம் முடிந்தது என்றாலும் அதற்கு முன்னரே பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அப்போதே மேற்கூரை இடிந்து சிறு விபத்தும் ஏற்பட்டுள்ளது.

சோமனூர் விசைத்தறித் தொழில் முக்கியத்துவம் உள்ள பகுதி என்பதால், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான மக்களும், மாணவர்களும் தினமும் இங்கு வந்தே வீடு திரும்புகின்றனர். அருகிலேயே சந்தை உள்ளிட்டவையும் இருப்பதால் பேருந்து நிலையம் பரபரப்பாகவே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு பேருந்து நிறுத்தத்தை எப்படியெல்லாம் பராமரிப்பு செய்திருக்க வேண்டும்? என்பதே அப்பகுதி மக்களின் கேள்வி.

சோமனூரைச் சேர்ந்த ஜான் சகாய ஆல்பர்ட் என்பவர் கூறியதாவது: பேருந்து நிலையம் கட்டும்போதே, தரமற்ற வகையில் கட்டுகிறார்கள் என்று கூறினோம். யாரும் கேட்கவில்லை. மாறாக தரமாகத்தான் உள்ளது என பொறியாளர் சான்றிதழைக் காட்டி மோசடியை மறைத்துவிட்டார்கள். 20 ஆண்டுகளுக்குள் 3 முறை தரைதளத்தை மாற்றினார்கள், சுற்றிலும் டைல்ஸ் கற்களை பதித்தார்கள். அழகு படுத்தினார்கள். ஆனால் முக்கியமான மேற்கூரையை யாரும் கண்டுகொள்ளவில்லை.

ஒரு முறை, இருமுறையல்ல, பேரூராட்சி நிர்வாகத்துக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் பேருந்து நிலையத்தின் நிலை குறித்து பல முறை புகார் தெரிவித்தோம். நாளடைவில் மழை நீர் தேங்கி மேற்கூரை வலுவிழந்தது. மழையால் தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்தே விட்டது. சரியான கட்டுமானத்தை மேற்கொள்ளாத, எச்சரிக்கை மனுக்களை கவனத்தில் கொள்ளாத அதிகாரிகளே இந்த விபத்துக்கு பதில் கூற வேண்டும் என்றார். இதற்கு ஆதாரமாக இடிபாடுகளில் இருந்த சிமென்ட் ஒட்டாத செங்கற்கள், பொறிந்து விழும் கான்கிரீட் தளம், துருப்பிடித்த கான்கிரீட் கம்பிகளையும் அதிகாரிகளிடம் காட்டி, பொதுமக்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

விபத்து ஏற்பட்ட பேருந்து நிலையம் மட்டுமல்ல சோமனூர் பகுதியில் அரசு கட்டுமானங்கள் பலவும் தரமற்று, அச்சுறுத்தும் நிலையில்தான் உள்ளன என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இடியும் நிலையில் பாலம்

பிரபாகரன் என்பவர் கூறும்போது, ‘இங்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரயில்வே பாலத்தில் தினம் ஒரு விபத்து நடக்கிறது. வாரத்துக்கு ஒருமுறை இடிபாடுகள் சீரமைக்கப்படுகின்றன.

பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள வேளாண் அலுவலகமும் மேற்கூரை இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. சோமனூரை ஒட்டியுள்ள கரவளி மாதப்பூரில் ஓராண்டில் கட்டி முடித்த பாலம் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. இப்படி சோமனூர் சுற்றுவட்டாரத்தில் மட்டும் ஏராளமான அரசு கட்டுமானங்கள் எப்போது வேண்டுமானாலும் விபத்தை ஏற்படுத்தலாம் என்ற நிலையில் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன’ என்றார்.

கருமத்தம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கதிரவமூர்த்தி கூறும்போது, ‘பேருந்து நிலையம் 1998-ல் எஸ்ஆர்ஏ என்ற கட்டுமான நிறுவனத்தால் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்டது. நான் பொறுப்பேற்ற கடந்த ஓர் ஆண்டில் பேருந்து நிலையம் தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை. சமீபத்தில் கழிப்பிடத்தை சரி செய்தோம். 2 நாட்களுக்கு முன்பு மேற்கூரையில் தண்ணீர் தேங்கியிருந்தால் டெங்கு மருந்து தெளிக்கலாம் என ஏறிப் பார்த்தோம். மழை நீரே தேங்கவில்லை. அப்படியிருக்கும்போது எப்படி விபத்து ஏற்பட்டது எனத் தெரியவில்லை. இதேபோல இடிந்து விழும் நிலையில் உள்ள வேளாண் அலுவலகத்தை சம்பந்தப்பட்ட துறையினர் தான் சரி செய்ய முடியும்’ என்றார்.

பள்ளி மேற்கூரை மாற்றுவது எப்போது?

சோமனூர் அடுத்துள்ள சென்னப்பசெட்டி புதூரில் ஏராளமான மாணவர்கள் படிக்கும் அரசு தொடக்கப்பள்ளிக் கட்டிடத்தில் மேற்கூரை, கதவு, ஜன்னல்கள் சேதமடைந்துள்ளன. சமூக ஆர்வலர் பி.கே.செல்வராஜின் கோரிக்கையை ஏற்று, பள்ளியை புனரமைக்க 2014ல் இருந்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அறிவுறுத்திவருகிறார். ஆனால் சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்காததால் நிலைமை மோசமாகி வருகிறது. இதுகுறித்து தி இந்துவில் செய்தி வெளியாகியுள்ளது. சோமனூர் விபத்துக்கு பிறகாவது, இதுபோன்ற பிரச்சினைகளை அரசு நிர்வாகங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x