Published : 09 Sep 2017 08:12 AM
Last Updated : 09 Sep 2017 08:12 AM

நீட் தேர்வுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெறும் வரை போராட்டத்தை தொடருவோம்: திருச்சி பொதுக் கூட்டத்தில் தலைவர்கள் ஆவேசம்

தடைகளைத் தகர்த்து நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும், யுத்தத்தில் வெற்றி பெறும் வரை ஓயமாட்டோம் என திருச்சியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஆவேசமாக பேசினர்.

நீட் தேர்வால் அரியலூர் மாணவி அனிதாவின் உயிரிழப்புக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்வில் நிரந்தர விலக்கு அளிக்கக் கோரியும் திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் நேற்று திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பேசியது: ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் தேர்வு குழிதோண்டி புதைத்துள்ளது.

நீட் தேர்வு என்ற சர்வதேச சதிக்கு மத்திய பாஜக அரசும், தமிழகத்தை ஆளும் அதிமுக அரசும் துணை போகின்றன. நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்குக் கிடைக்கும் வரை ஓயமாட்டோம். இதற்காக சிறை செல்லவும் நாங்கள் தயார் என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்:நீட் போராட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இதுவரை தீர்ப்பு எதுவும் சொல்லவில்லை. சட்டம்- ஒழுங்கு பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்றுதான் கூறியுள்ளது.

நீட் தேர்வை எதிர்த்து போராடக் கூடாது என்று உத்தரவு வந்தாலும் அஞ்சமாட்டோம்.

ஆனால், பாஜகவினர் கொடுத்த புகாரை ஏற்று பொதுக்கூட்டத்துக்கு போலீஸார் தடை விதித்துள்ளனர். தமிழகத்தில் பினாமி ஆட்சி நடைபெறுகிறது என்பதை உறுதிப்படுத்த இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா?

மத்திய அரசு மறைமுகமாக மனுதர்ம சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது. இதை எதிர்த்து யுத்தம் தொடங்கியுள்ளோம். யுத்தத்தில் வெற்றி பெறும் வரை ஓயமாட்டோம் என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: மத்திய, மாநில அரசுகளின் பிடிவாதத்தால்தான் அனிதாவின் மரணம் நிகழ்ந்தது.

எனவே, அவரது மரணத்துக்கு பிரதமரும், முதல்வரும் பொறுப்பேற்க வேண்டும். தமிழகத்தில் உணர்வுகளை மதிக்கத் தெரியாத ஆட்சி நடைபெறுவதால், ஆசிரியை சபரிமாலா தனது பணியை ராஜினாமா செய்ய வேண்டியதில்லை.

ஆனால், அவரது தியாகத்தை மதித்து வணக்குகிறோம். தமிழக மாணவர்களின் நலன், மாநில சுயாட்சி உரிமை மற்றும் மக்களைக் காப்பாற்ற நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: இந்தாண்டு மருத்துவப் படிப்புக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வு, அடுத்தாண்டு சித்த மருத்துவப் படிப்புக்கும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

தடைகளைத் தகர்த்து நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.

முன்னதாக, நீட் தேர்வால் மருத்துவ கனவு தகர்ந்ததால் உயிரிழந்த அனிதாவின் உருவப் படத்துக்கு கட்சித் தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x