Published : 28 Apr 2023 08:22 PM
Last Updated : 28 Apr 2023 08:22 PM

அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: போலி ஆவணங்களை சமர்ப்பித்த விவகாரத்தில், சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வருக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் 7 அரசு ஆயுஷ் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் செங்கல்பட்டில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன.

இதில் சென்னை யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் முறையற்ற நியமனங்கள் காரணமாக அரசுக்கு 2 கோடியே 30 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை துறை அறிக்கை அளித்துள்ளது.

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியில், போலி ஆவணங்களைக் கொடுத்து மணவாளன் முதல்வராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு எதிராக துறை ரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ இயக்குநர்மற்றும் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பினேன்.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கல்லூரி முதல்வராக மணவாளன் நீடிப்பது பொது நலனுக்கு எதிரானது. எனவே, அவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என அரசு பிளீடர் முத்துகுமார் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x