Published : 28 Apr 2023 05:31 PM
Last Updated : 28 Apr 2023 05:31 PM

மதுரை | ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் அழியும் பாசனக் கால்வாய்கள்: ஆட்சியரிடம் விவசாயிகள் குமுறல்

மதுரை: ''வீட்டுமனைகளை விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர், பாசன கால்வாய்களை ஆக்கிரமித்து விவசாயத்தை அழிக்கிறார்கள்'' என விவசாயிகள் ஆட்சியர் அனீஸ் சேகரிடம் குமுறினர்.

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று ஆட்சியர் அனீஸ் சேகர் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் மற்றும் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, வருவாய் துறை, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விவசாயி அழகு: மதுரை கருப்பாயூரணி, வளர்நகர் பகுதி பகுதியில் நன்செய் நிலங்களுக்கு பாசனம் தரக்கூடிய பெரியாறு கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மூலம் 350 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசனம் வசதி பெறுகிறது.

தற்போது நன்செய் நிலங்களை வைத்திருக்கும் அப்பாவி விவசாயிகளை ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் ஏமாற்றி கிரயம் செய்து வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்து விவசாயத்தை அழித்து வருகின்றனர். அவர்கள் பாசனக் கால்வாயகளை சேதப்படுத்தி அழிப்பதால் தண்ணீர் அடுத்த நிலங்களுக்கு செல்ல முடியாதநிலை உள்ளது.

அதனால், என்னைப் போன்ற பாரம்பரியமாக விவசாயம் செய்யக்கூடியவர்கள் விவசாயம் செய்ய முடியவில்லை. எங்களை போன்ற விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்தால் மட்டுமே உங்களை போன்றவர்கள் உணவு சாப்பிட முடியும்.

ஆட்சியர் அனீஸ் சேகர்: விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதை தடுக்கதான் மதுரை மாவட்டத்தில் மாஸ்டர் பிளான் தயார் செய்கிறோம். அதில் எந்தெந்த பகுதிகள் குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அமையும் இடங்களை அடையாளம் கண்டு, விவசாய நிலங்களை பாதுகாக்கவும், கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

விவசாயி பாண்டி: மேலூர் புதுசுக்கான்பட்டி கிராமத்தில் பெரியாறு பாசன கால்வாயில் 4வது பகிர்மான கால்வாயை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த கால்வாயில் தென்னை மரக்கன்றுகளை நட்டுள்ளனர். கடந்த ஆண்டு முதலே புகார் செய்து வருகிறேன். அந்த கால்வாயை மீட்டு பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, திடீரென்று உசிலம்பட்டி அருகே அரளி குண்டத்தைச் சேர்ந்த ஒரு மூதாட்டி பெருமாயி என்பவர், ஆட்சியரிடம் எழுந்து சென்று தனது நிலத்தை தனி நபர் ஒருவர் பெயர் மாற்றம் செய்து மோசடி செய்துள்ளார். அதிகாரிகளிடம் கேட்டால், கோர்ட்டுக்கு போங்க என்கிறார்கள். நானே ஒரு நாளைக்கு ரூ.300 ஊதியத்திற்கு வேலைக்கு சென்றால்தான் சாப்பாடு, இதில் எங்கே போய் கோர்ட்டுக்கு போறது,'' என்றார்.

அதற்கு ஆட்சியர், ''ஆர்டிஓ-வை விசாரிக்க அனுப்புகிறேன்'' என்றார். அதற்கு அந்த மூதாட்டி சட்டென்று, ''எல்லோரும் அவருடன் சேர்ந்து ஏமாற்றுகிறவர்கள்தான். நான் உங்களைத்தான் மலைபோல் நம்புகிறேன். நீங்க நடவடிக்கை எடுங்கள்,'' என்றார்.

விவசாயி பார்த்தசாரதி: வாடிப்பட்டி திருவானையூர் பகுதியில் நெல் அடிக்கும் களத்தில் பஞ்சாயத்து அலுவலகம் கட்டுகிறார்கள். தொடர்ந்து 4 கூட்டங்களில் மனு கொடுக்கிறேன். இதுவரை விவசாயிகளை பிடிஓ, அதிகாரிகள் யாரும் பார்க்கவில்லை. எங்க ஊரில் 3 நெல் களம் உள்ளது. ஒரு களத்தில் பள்ளிக்கூடம் கட்டி விட்டார்கள். இரண்டாவது களத்தில் பாதையாக பயன்படுத்துகிறார்கள். மூன்றாவது களத்தில் இன்று பஞ்சாயத்து அலுவலகம் கட்டுகிறார்கள். விவசாயிகள் நெல் அடிக்க களத்திற்கு என்ன செய்வார்கள்.

ஆட்சியர் அனீஸ் சேகர்: இந்த பிரச்சினை, பழைய பஞ்சாயத்து தலைவருக்கும், தற்போதுள்ள பஞ்சாயத்து தலைவருக்கும் உள்ள பிரச்சினை. இதை இங்கே ஆலோசிக்க முடியாது. தனியாக பேசிக் கொள்ளலாம்.

விவசாயி அலங்காநல்லூர் ஜெயபிரகாஷ்: கல்லனை ஊராட்சி, அலங்காநல்லூர் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கழிவு நீர், கடைகளில் வெளியேறும் சாக்கடை நீர் பாசனக் கால்வாயில் கலக்கிறது. மழைக்காலத்தில் ஒட்டுமொத்தமாக கலக்கிறது. அதனால், 2 ஆண்டுகளாக நான் விவசாயமே செய்ய முடியவில்லை. புகார் செய்தால் அதிகாரிகள் வந்து பார்ப்பதே இல்லை.

ஆட்சியர் அனீஸ் சேகர்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு கழிவுநீர் கலக்காமல் இருக்க கல்லணை ஊராட்சி, அலங்காநல்லூர் பேரூராட்சிகளுக்கு நோட்டீஸ் விட்டு நடவடிக்கை எடுங்கள். பாசனக் கால்வாய்களில் கழிவுநீர் விடுவதை அனுமதிக்க முடியாது. மிக முக்கியமான பிரச்சினை. உயர் நீதிமன்றம் இதுபோல் பாசனக் கால்வாயில் கழிவுநீர் விடும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்த வரலாறு நடந்துள்ளது. அதனால், இதை விரைவாக சரி செய்யப் பாருங்கள்.

விவசாயி பாலபாண்டி: வாடிப்பட்டி அருகே அய்யாங்கோட்டை நேரடி அரசு நெல் கொள்முதலில் ஒரு மூட்டை நெல் போடுவதற்கு அரசு நிர்ணயித்த ரூ.20க்கு பதிலாக ரூ.60, ரூ.80 என அதிகமாக வசூல் செய்கிறார்கள். இதை தட்டிக்கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அதிகாரிகள் அவர்களுக்கு துணை போகிறார்கள்.

ஆட்சியர் அனீஸ்சேகர்; ஆதாரம் இருந்தால் கொடுங்கள்; நடவடிக்கை எடுக்கிறேன். உடனே விவசாயி பால்பாண்டி, அதற்கான ஆதாரத்தை ஆட்சியரிடம் வழங்கினார். அவர் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

விவசாயம் பார்க்கும் 'ஏரோநாட்டிக்கல்' படித்த இளைஞரை பாராட்டிய ஆட்சியர்: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற பேசிய இளைஞர் சங்கிலிபாண்டி என்பவர் திடீரென்று எழுந்து, ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு மென்பொருள் நிறுவனத்தில் வேலைபார்த்துக் கொண்டே பேரையூர் தாலுகாவில் விவசாயம் பார்க்கிறேன். ட்ரோன் வைத்து மருந்து தெளித்து விவசாயம் பார்க்கிறேன். நவீன தொழில்நுட்பத்தில் லாபகரமாக விவசாயம் செய்கிறேன். அரசு ஒத்துழைத்தால் மற்ற விவசாயிகளுக்கு என்னால் முடிந்த நவீன தொழில் நுட்ப உதவிகளை வழங்க தயாராக இருக்கிறேன்.'' என்றார்.

அவரை ஆட்சியர் அனீஸ் சேகர் ''வெரி குட்'' என அருகில் அழைத்துப் பாராட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x