Last Updated : 28 Apr, 2023 02:14 PM

 

Published : 28 Apr 2023 02:14 PM
Last Updated : 28 Apr 2023 02:14 PM

புதுச்சேரி அரசு பெண் ஊழியர்களுக்கு வெள்ளிக் கிழமைகளில் வேலை நேர சலுகை: திமுக கண்டனம்

எதிர்க்கட்சித் தலைவர் சிவா | கோப்புப் படம்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு பெண் ஊழியர்களுக்கு வெள்ளிக் கிழமைகளில் 2 மணி நேரம் சிறப்பு அனுமதி அளிக்கப்படும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை அறிவித்திருப்பது கூட்டணி கட்சியின் சித்தாந்தத்தை திணிக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது என திமுக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கை: "புதுச்சேரி அரசுத் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு வெள்ளிக் கிழமைகளில் இரண்டு மணி நேரம் வேலைக் குறைப்பு செய்யப்படுவதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் அறிவிப்பு செய்துள்ளது பெண் அடிமைத்தனத்தை ஊக்குவிப்பதாக நாங்கள் கருதுகிறோம்.

பெண்களின் வாழ்நாளை முழுவதுமாக விழுங்கும் வீட்டு வேலைகளையும், பூஜை வேலைகளையும் முடிக்க நேரம் காலம் உண்டா? யாருக்குமே பயனின்றி அறிவித்திருக்கும் இந்த 2 மணி நேர சலுகை பெண்களை பலவீனப்படுத்துவதாகவே உள்ளது. கடந்த மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் போதிய நிதி ஆதாரம் இல்லாத போதும் எண்ணற்ற திட்டங்களை முதல்வர் அறிவித்தார்.

அரசுப் பேருந்தில் அனைத்து பெண்களும் இலவசமாக பயணம் செய்யலாம், மகளிருக்கான கேஸ் சிலிண்டர் மானியம் ரூ. 300 வழங்கப்படும், பெண் குழந்தை பிறந்தால் ரூ. 50 ஆயிரம் வைப்பு நிதி கொடுக்கப்படும், ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும், பெண்கள் பிரத்யேகமாக பயணிக்கும் வகையில் "பிங்க்" நிற பேருந்து வாங்கப்படும் என பெண்களுக்கு மட்டும் எண்ணற்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

முதல்வரின் இந்த அறிவிப்பை மக்களோடு சேர்ந்து நாங்களும் வரவேற்பு செய்தாலும், அதற்கான நிதி ஆதாரத்தைக் கூறுங்கள் என்றோம். அதற்கு அரசு சார்பில் எந்த பதிலும் இல்லை. ஆனாலும் முதல்வர் செய்வார் என்ற நம்பிக்கையில் நாங்களும் இருந்து வருகிறோம். முதல்வர் அறிவிப்பு செய்து ஒரு மாதம் ஆன நிலையில் அந்த திட்டங்களுக்கு ஆளுநர் அனுமதி அளித்தாரா?

அதற்கான நிதி ஆதாரம் கிடைத்ததா? போன்ற எந்த தகவலும் அரசு தரப்பில் இருந்தும், ஆளுநர் தரப்பில் இருந்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.

அதேபோல், தனியார் தொழிற்சாலைகளில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு இருப்பதும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய தொழிலாளர் துறை தொழிற்சாலை நிர்வாகத்திற்கு பக்க பலமாக இருப்பதும் அதன் காரணமாக பெண் தொழிலாளர்களின் பணி பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது குறித்து ஆளுநர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் செயல்பாட்டிற்கு வந்த பிறகு பெண்கள் பணியாற்றும் நிறுவனங்களில் அமைக்கப்பட வேண்டிய புகார் கமிட்டிகள் மற்றும் விசாகா கமிட்டி ஆகியன முறையாக அமைக்கப்பட்டு செயல்படுவது இல்லை. இதனை அரசு கண்காணிப்பதும் இல்லை. செயல்படாமல் உள்ள மகளிர் ஆணையத்தை செயல்படுத்த நடவடிக்கை இல்லை.

இப்படி பெண்களின் சமூக மற்றும் பணி பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் இருக்கும் இந்த அரசு தமது கூட்டணி கட்சியின் சித்தாந்தத்தை பெண்கள் மத்தியில் திணிக்கும் முயற்சியாகவே ஆளுநரின் அறிவிப்பை பார்க்க முடிகிறது.

அரசுத் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு வெள்ளிக் கிழமைகளில் காலையில் இரண்டு மணி நேரம் விலக்கு என்பதை மாலையில் மாற்ற அரசு பரிசீலனைச் செய்ய வேண்டும்.

புதுச்சேரி அரசு பெண்களுக்கு அறிவித்த திட்டங்களுக்கு தேவையான நிதியினை மத்திய அரசிடம் கேட்டுப்பெற்று அத்திட்டங்களை நடப்பு நிதியாண்டில் நிறைவேற்ற முனைப்பு காட்ட வேண்டும். அதற்கு துணைநிலை ஆளுநர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதைவிடுத்து நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அரசியல் சித்தாந்தங்களை அரசு ஊழியர்கள் வழியாக மக்களிடம் புகுத்த முற்பட்டால் அதை திமுக வேடிக்கை பார்க்காது என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்" என சிவா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x