Published : 28 Apr 2023 04:04 AM
Last Updated : 28 Apr 2023 04:04 AM

“திட்டங்களை செயல்படுத்துவதில் தஞ்சாவூருக்கு தான் முதல் உரிமை” - அமைச்சர் கே.என்.நேரு

தஞ்சாவூர்: பாபநாசத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், பாபநாசம், அம்மாப்பேட்டை ஒன்றியங்களிலுள்ள 252 கிராமங்களுக்கு ரூ. 288.02 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, அடிக்கல் நாட்டி வைத்து கூறியது, "பாபநாசம் வட்டம், சருக்கை கிராமம், புதுக்குடி கொள்ளிடம் ஆற்றில் கிணறு அமைக்கப்பட்டு, அதிலிருந்து மின் மோட்டார் மூலம் 15.20 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு, பாபநாத்தில் 21 ஊராட்சிகளும், அம்மாப்பேட்டையிலுள்ள 46 ஊராட்சிகள் என 252 கிராமங்களில் அமைக்கப்படவுள்ள 68 தரைமட்ட நீர்தேக்கத்தொட்டிகளுக்கு, 204.32 கி.மீ. நீளமுள்ள நீர் உந்து குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் ஏற்றப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 18,444 புதிய வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படவுள்ளது. இந்த திட்டம் 2024-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக முதல்வர் பதவியேற்ற நாளிலிருந்து சுமார் ரூ. 30 ஆயிரம் கோடி வழங்கி, இத்திட்டங்களை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளார். சேலத்திலுள்ள ஊரக குடியிருப்புகளுக்கு ஒரு நாளுக்கு 54 எம்எல்டி குடிநீர் இன்னும் 1 மாதத்தில் வழங்கவுள்ளோம்.

இதேபோல் கோயம்புத்தூருக்கு சிறுவாணி தண்ணீரை பில்லூர் 1,2 திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கி வந்தோம். ஆனால் கேரளாவிலிருந்து சிறுவாணிக்கு வரும் தண்ணீர் குறைந்துவிட்ட காரணத்தால், அங்கு தண்ணீர் தர முடியவில்லை. இதனால், பில்லூர் 3 திட்டத்தை வழங்கி, அங்கு 30 நாட்களுக்குள்ளாக ஒரே நகருக்கு 188 எம்எல்டி தண்ணீர் 24 மணி நேரமும் வழங்கப்படவுள்ளது.
மேலும், கம்பத்திலிருந்து பெரியார் நதியை நீராதரமாக கொண்டு, குழாய் அமைக்கும் பணி முடிந்தவுடன், மதுரை முழுவதும் தண்ணீர் பஞ்சமே இல்லை என்ற நிலை உருவாகும்.

இதேபோல் திருநெல்வேலி, சங்கரன்கோயில் நாகர்கோயில், தூத்துக்குடி, கடலாடி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிக்கு தண்ணீர் வழங்குவதற்கான இத்திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் வழங்கியுள்ள ரூ. 30 ஆயிரம் கோடி பணிகள் முடிவடைந்தால், ஐந்தரை கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும்.

மேலும், பாபநாசம் வட்டம் வாழ்க்கை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தூத்தூர் வரை நீரொழிங்கியுடன் கூடிய பாலம் உள்ளிட்ட தமிழகத்தில் கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் முதல் உரிமை தஞ்சாவூர் மாவட்டத்திற்கு தான்" எனத் தெரிவித்தார். தொடர்ந்து, அங்கு ரூ. 15 லட்சத்தில் அமைக்கப்பட்டிருந்த பூங்காவை திறந்து வைத்தார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் எஸ்.கருணாகரன் வரவேற்றார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் என்.ரவி திட்ட விளக்கவுரையாற்றினார். இதில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எம்எல்ஏக்கள் எம்.எச்.ஜவாஹிருல்லா, துரை,சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், நிவேதா முருகன் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர், முடிவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் எஸ்.எழிலரசன் நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x