14 வயது தமிழ் சிறுமியின் சூடான் அனுபவம் முதல் அமித் ஷா மீதான காங். புகார் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஏப்.27, 2023

14 வயது தமிழ் சிறுமியின் சூடான் அனுபவம் முதல் அமித் ஷா மீதான காங். புகார் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஏப்.27, 2023
Updated on
3 min read

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு: ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்குகள் தொடர்பாக ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் முறைப்படுத்தல் சட்டத்தை எதிர்த்து 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரபட்டுள்ளன.

இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, விதிகளை அறிவித்துள்ள நிலையில், இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை எனவும், ரம்மி திறமைக்கான விளையாட்டு என நீதிமன்றங்கள் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், இந்தச் சட்டத்தில் ரம்மி விளையாட்டு, அதிர்ஷ்ட விளையாட்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

திறமைக்கான விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்ட ரம்மியை தடை செய்ய முடியாது எனவும், இந்தச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சூதாட்டம் குறித்த இந்தச் சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு தான் அதிகாரமில்லை எனவும் விளக்கினார்.

காலதாமதமாகும் திட்டங்களை சுட்டிக்காட்டிய முதல்வர்: “மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய திட்டங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் முதல்வர் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

அப்போது அவர் கூறும்போது, “இன்றைய ஆய்வுக் கூட்டத்தின்போது சில திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தேவையற்ற காலதாமதம் காணப்பட்டது. நான் எந்தத் துறையையும் குறிப்பிட்டு கூற விரும்பவில்லை. மாவட்ட ஆட்சியர்களும், துறைத் தலைவர்களும் அறிவீர்கள். அளிக்கப்பட்ட நிதியை குறிப்பிட்ட காலத்திற்குள் மக்களுக்காக, திட்டத்திற்காக செலவிடுவது தான் திறன்மிகு நிர்வாகம் ஆகும். அதைத்தான் நான் உங்களிடம் எதிர்ப்பார்கிறேன்” என்றார்.

‘பேரூராட்சி பகுதிகளுக்கும் காலை உணவுத் திட்டம்’: "பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் இந்த ஆண்டு பேரூராட்சி பகுதிகளிலும் விரிவுப்படுத்தப்படும்" என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

“தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது”: தமிழகத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும், “தமிழகத்தில் கரோனா தொற்று 500-க்கும் மேல் பதிவாகி இருந்தது. தற்பொழுது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை” என்றார்.

இதற்கிடையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,355 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது: இபிஎஸ்: அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக பழனிசாமி புதன்கிழமை டெல்லி சென்றார். இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. முந்தைய நாடாளுமன்ற தேர்தலில் இருந்து தற்போது வரை அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது. எங்களுக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் எந்த தகராறும் கிடையாது. எல்லோரும் அவரவர் கட்சியை வளர்க்கத்தான் பார்ப்பார்கள். அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் சுதந்திரமாக செயல்படும் கட்சிகள்" என்று தெரிவித்தார்.

100-வது ‘மனதின் குரல்’ 100 இடங்களில் ஒளிபரப்ப பாஜக திட்டம்: பிரதமர் மோடியின் நூறாவது மனதின் குரல் நிகழ்வு இம்மாதம் 30-ல் நடைபெறுகிறது. இதனை, தமிழகம் முழுவதும் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு நூறு இடங்கள் வீதம் ஒளிபரப்ப பாஜக திட்டமிட்டுள்ளது.

“காங்கிரஸின் வாக்குறுதிகள் பொய்யாகி விட்டன” - பிரதமர் மோடி: அடுத்த மாதம் 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள கர்நாடக மாநில பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி வியாழக்கிழமை காணொளி மூலம் உரையாற்றினார். அப்போது அவர், "காங்கிரஸ் கட்சி இனி வாக்குறுதிகள் கொடுக்க முடியாத நிலையில் உள்ளது. காங்கிரஸ் என்றாலே ஊழல் மற்றும் பொய்யான வாக்குறுதி என்று அர்த்தம். இனி காங்கிரஸ் கட்சி என்ன வாக்குறுதிகளை வழங்கும். அதன் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகிவிட்டன" என்றார்.

இதற்கிடையில் பிரதமரின் இந்தப் பேச்சுக்கு, "அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது பிரதமர் மோடியும் விரக்தி மற்றும் நம்பிக்கையின்மை காரணமாக தரக்குறைவான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்" என்று காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

பூஞ்ச் சம்பவத்தில் பிரதமர் அமைதி காப்பது ஏன்? - காங்கிரஸ்: "ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் கடந்த 20-ம் தேதி பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனால், இந்தச் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி இதுவரை ஒருவார்த்தைகூட பேசவில்லை; ஒரு இரங்கல்கூட தெரிவிக்கவில்லை" என்று காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கெரா குற்றம்சாட்டியுள்ளார்.

அமித் ஷா மீது போலீஸில் புகார் கொடுத்த காங்கிரஸ்: பெங்களூரு காவல் நிலையத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது புகார் மனு ஒன்றை காங்கிரஸ் கொடுத்துள்ளது. அதில் கர்நாடாகாவில் நடந்த பாஜக பேரணியில், காங்கிரஸ் கட்சி குறித்து அவதூறாகவும் வெறுப்பைத் தூண்டும் வகையிலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாகக் கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

தமிழகம் வந்த 14 வயது சிறுமியின் சூடான் அனுபவம்: மத்திய அரசின் ‘ஆபரேஷன் காவேரி’ நடவடிக்கையின் கீழ், உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்துள்ள சூடானில் இருந்து மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் புதுடெல்லி வந்தடைந்தனர். அவர்களில் 5 தமிழர்கள் வியாழக்கிழமை காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அதில் ஒருவரான 14 வயது சிறுமி கூறும்போது, “நாங்கள் இருந்த இடம் மிகவும் மேசமான நிலையில் இருந்தது. அங்குதான் ராணுவத் தளங்கள் உள்ளது. அதைக் கைப்பற்ற கடும் சண்டை நடைபெறுகிறது. அங்கு போடப்படும் குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். போர் தொடங்கிய முதல் நாளில் இருந்து மின்சாரம் இல்லை. முதல் 4 நாட்கள் இணைய இணைப்பு இருந்தது. அப்போது, இந்தியாவின் தூதர் எங்களைத் தொடர்பு கொண்டு பயப்பட வேண்டாம் என்று தெரிவித்தார்.

அதன்பிறகு நாங்கள் இருந்த இடத்தில் எங்களை மீட்டு பேருந்து மூலம் அருகில் இருந்த விமான நிலையத்துக்கு கொண்டு வந்தனர். விமான நிலையத்தில் ஒருநாள் தங்கி இருந்தோம். 26 மணி நேரம் பேருந்தில் பயணம் செய்து விமான நிலையம் சென்றோம். அங்கிருந்து விமானப் படையின் விமான நிலையம் மூலம் மற்றொரு விமானம் நிலையம் வந்தோம். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி வந்து தற்போது சென்னை வந்து உள்ளோம்" என்று அவர் கூறினார்.

இதனிடையே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விமானம் மூலம் வியாழக்கிழமை மதுரை வந்தனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in