

சென்னை: உள்நாட்டுப் போரால் வன்முறையும் மோதலும் சூழ்ந்த சூடான் நாட்டில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்கள் 5 பேர் இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தனர்.
சூடான் நாட்டில் நடைபெற்று வரும் ராணுவம் மற்றும் உள்நாட்டு படைப் பிரிவினர்களுக்கு இடையேயான மோதல்களினால் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சூடானில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு ‘ஆபரேஷன் காவேரி’ என்ற பெயரில் நடவடிக்கை எடுத்து வருகிறது. அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்பதற்காக, புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்திலும், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம், சென்னையிலும் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டுப்பாட்டு அறை (Control Room) அமைக்கப்பட்டு, மீட்புப் பணிகள் நடைப்பெற்று வருகிறது.
சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக கப்பல்களையும் விமானங்களையும் மத்திய அரசு அனுப்பி உள்ளது. சூடானின் துறைமுக நகரான போர்ட் சூடானில் இருந்து சவூதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவுக்கு இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு பின்னர் அங்கிருந்து அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்திய விமானப் படை விமானங்கள் மூலம் இதுவரை 4 விமானங்களில் இந்தியர்கள் போர்ட் சூடானில் இருந்து ஜெட்டாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் 360 பேர் கொண்ட முதல் குழு, சவூதி அரேபிய விமானம் மூலம் புதன்கிழமை இரவு புதுடெல்லி வந்தடைந்தனர். அவர்களில் தமிழர்கள் 5 பேர் வியாழக்கிழமை அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்களில் ஒருவரான 14 வயது சிறுமி கூறும்போது, "கடந்த 15 நாட்கள் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. என்னுடைய கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் மீட்கப்பட்டு தமிழகம் வந்தது எனது வாழ்வின் பெரிய மாற்றமாக இருக்கும். தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
நாங்கள் இருந்த இடம் மிகவும் மேசமான நிலையில் இருந்தது. அங்குதான் ராணுவத் தளங்கள் உள்ளது. அதைக் கைப்பற்ற கடும் சண்டை நடைபெறுகிறது. அங்கு போடப்படும் குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். போர் தொடங்கிய முதல் நாளில் இருந்து மின்சாரம் இல்லை. முதல் 4 நாட்கள் இணைய இணைப்பு இருந்தது. அப்போது, இந்தியாவின் தூதர் எங்களைத் தொடர்பு கொண்டு பயப்பட வேண்டாம் என்று தெரிவித்தார்.
அதன்பிறகு நாங்கள் இருந்த இடத்தில் எங்களை மீட்டு பேருந்து மூலம் அருகில் இருந்த விமான நிலையத்துக்கு கொண்டு வந்தனர். விமான நிலையத்தில் ஒருநாள் தங்கி இருந்தோம். 26 மணி நேரம் பேருந்தில் பயணம் செய்து விமான நிலையம் சென்றோம். அங்கிருந்து விமானப் படையின் விமான நிலையம் மூலம் மற்றொரு விமானம் நிலையம் வந்தோம். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி வந்து தற்போது சென்னை வந்து உள்ளோம்" என்று அவர் கூறினார்.