Published : 19 Sep 2017 11:46 AM
Last Updated : 19 Sep 2017 11:46 AM

ஆம்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடரும் மணல் கடத்தலால் பாழாகும் பாலாறு: நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதி

பாலாற்றில் மணலை அள்ளி லாரிகள், டிராக்டர்களில் கடத்தப்படுவதாக தேவலாபுரம் பகுதியைச் சேர்ந்த மேகநாதன் என்பவர் ‘ தி இந்து’ உங்கள் குரல் சேவையில் தனது புகாரை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, “ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு, சோமலாபுரம், தேவலாபுரம், சோலூர், ஆலாங்குப்பம், மின்னூர், ஏ-கஸ்பா ஆகிய பகுதிகளில் உள்ள பாலாற்றுப் பகுதிகளில், சமீபகாலமாக மணல் கடத்தல் அதிகரித்து வருகிறது. மாட்டு வண்டிகள் மூலம் அள்ளப்படும் மணல் தனி இடங்களில் பதுக்கப்பட்டு, அங்கிருந்து டிப்பர் லாரிகள், டிராக்டர்கள் மூலம் இரவு நேரங்களில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது.

குறிப்பாக, ஆம்பூர் அடுத்த மாதனூர், சோமலாபுரம், சின்ன கொம்பேஸ்வரம், பச்சக்குப்பம் ஆகிய பாலாற்றுப் பகுதிகளில் 6 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு மணல் அள்ளப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக, மணல் கடத்தல் நிறுத்தப்பட்டது. தற்போது, மழை பெய்யாததால் மீண்டும் மணல் கடத்தல் அதிகரித்துள்ளது.

இங்கிருந்து அள்ளப்படும் மணல், பாலாற்றை ஒட்டியுள்ள மயானப் பகுதியில் பதுக்கப்படுகிறது. இரவு நேரங்களில் டிப்பர் லாரிகள், கன்டெய்னர் லாரிகள், டிராக்டர்களில் கடத்தப்படுவதால், பாலாற்றின் வளம் பாழாகியுள்ளது. அதிகாரிகளுக்குத் தெரிந்தே மணல் கடத்தல் நடக்கிறது. வழக்குப் பதிவு செய்யும் போலீஸார், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. ” என்றார். இதுகுறித்து ஆம்பூர் காவல் துறையினரிடம் கேட்டபோது, ‘ஆம்பூர் காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் மணல் கடத்தலைத் தடுக்க போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மணல் கடத்துவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முழுமையாகக் கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x