Last Updated : 24 Sep, 2017 02:48 PM

 

Published : 24 Sep 2017 02:48 PM
Last Updated : 24 Sep 2017 02:48 PM

பிச்சாவரம் அருகே இயற்கை காய்கறி தோட்டத்தில் பட்டதாரி பெண் ஆர்வம்

 

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் பிச்சாவரம் செல்லும் வழியில் கீழசாவடி கிராமத்தை சேர்ந்தவர் கவிதா ராமசாமி. கணித பாடத்தில் இளங்கலை மற்றும் ஆசிரியர் படிப்பு முடித்த பட்டதாரி இவர்.

கவிதா அவரது ஊரில் இருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ள தில்லைவிடங்கன் கிராமத்தில் 40 செண்டு நிலத்தில் இயற்கை வேளாண் தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார். இதில் விளையும் காய்கறிகளை அப்பகுதி மக்களுக்கு குறைந்த விலைக்கு வழங்கி வருகிறார்.

இதுகுறித்து கவிதா கூறுகையில், “எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. அதனால் எந்த வருத்தமும் இல்லை.

எனது கணவர் விவசாயி. அவர் உதவியுடன் தில்லைவிடங்கன் கிராமத்திலுள்ள எங்களது இடத்தில் கத்திரி, வாழை,வெண்டை, பாகல், கீரை வகைகள், புடலங்காய் உள்ளிட்டவைகளை கொண்ட இயற்கை வேளாண் தோட்டத்தை அமைத்து கடந்த இரு ஆண்டுகளாக பராமரித்து வருகிறேன். இதில் பூ வகை செடிகளை ஊடுபயிராக நட்டுள்ளேன்.

வீட்டில் ஆடு, மாடுகள் உள்ளன. அதன் கழிவுகளை மட்டும் தோட்டத்திற்கு போட்டு செடிகளை வளர்த்து வருகிறேன். வேதிபொருட்கள் போடாமல் வளருவதை பார்த்து இந்த பகுதியில் உள்ளவர்கள், சாலையில் செல்பவர்கள் காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ 300 லிருந்து ரூ500 வரை கிடைக்கிறது’’ என்று கூறினார்.

தொடர்ந்து தன் கணவருடன் சென்று தோட்டத்தை சுற்றிக் காட்டிய கவிதா, “தற்போது மக்கள் இயற்கை வேளாண் பொருட்களின் மீது தனி கவனம் செலுத்தி வருகிறார்கள். இப்போதுள்ள பெண்கள் கற்ற கல்விக்கு சரியான வேலை கிடைக்கவில்லையென்றால் மன பாதிப்பு அடையாமல் வீட்டு தோட்டத்தில் அல்லது மாடியில் காய்கறி தோட்டம் அமைக்கலாம். வேதிபொருள் இல்லாமல் நம்ம வீட்டில் சேகரிக்கப்படும் இயற்கை கழிவுகளைக் கொண்டே செடிகளை வளர்த்து நம் குடும்பத்துக்கும், அக்கம்பக்கத்தினருக்கும் இயற்கை காய்கறிகளை வழங்கலாம்.’’ என்றும் தெரிவித்தார்.

மேலும் இது நல்ல ஒரு பொழுதுபோக்கும் கூட என்று அவர் தெரிவித்தார். தோட்டப் பணிகளில் அவரது கணவர் ராமசாமி உதவியாக இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x