Last Updated : 13 Sep, 2017 11:40 AM

 

Published : 13 Sep 2017 11:40 AM
Last Updated : 13 Sep 2017 11:40 AM

கோவை மருதமலை வன எல்லையோரம்: விலங்குகள் உலவும் பகுதியில் துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளம் - காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள மருதமலை வன எல்லை ஓரத்தில், மாநகர காவல்துறையின் துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளம் அமைக்கப்பட்டிருப்பது சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்ட வனக்கோட்டமானது, தமிழகத்திலேயே அதிக வன விலங்கு மோதல் சம்பவங்கள் நடக்கும் இடமாக அறியப்படுகிறது. உயிரிழப்புகளையும், பயிர்ச் சேதங்களையும் தடுக்க உறுதியான திட்டங்கள் தேவை என பல ஆண்டுகளாக மக்கள் வலியுறுத்துகின்றனர். வனத்துறையின் நடவடிக்கையை மீறி, வன விலங்குகளால் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன.

ஒருபுறம் களிறு திட்டத்தை கையில் எடுத்து, மக்களை சந்தித்து பிரச்சினைகளைத் தீர்க்க வனத்துறை முயற்சிக்கிறது. ஆனால், மற்றொருபுறம் வன எல்லை ஓரத்தில் மாநகர காவல்துறை துப்பாக்கிச் சுடும் தளத்தை அமைத்து பிரச்சினையை தீவிரப்படுத்துகிறது என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.

கோவையில் யானைகள் ஊடுருவல் அதிகமுள்ள இடங்களில் ஒன்று மருதமலை வனப்பகுதி. நேற்று முன்தினம்கூட, பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து மருதமலை சாலை வரை, பொதுமக்களை அச்சுறுத்திய 5 யானைகள் நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு வனத்துக்குள் விரட்டப்பட்டன. இப்படி தினந்தோறும் யானைகள், காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள் என பல வகை விலங்கினங்கள் ஊடுருவுவதால், இங்குள்ள மக்கள் நிம்மதி இழந்துள்ளனர். கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையும் திணறுகிறது.

இப்படிப்பட்ட சூழலில், பாரதியார் பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான வன எல்லையோரப் பகுதியில், சுமார் 400 மீட்டர் இடத்தில் மாநகரக் காவல்துறையின் துப்பாக்கிச் சுடும் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காவலர்களுக்கும், என்சிசி மாணவர்களுக்கும் துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச் சுடும் சத்தங்களால், விலங்குகள் ஊடுருவல் அதிகரிக்கும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:

ஏற்கெனவே யானைகள் நடமாட்டத்தால் உயிருக்கு அஞ்சி வாழ்கிறோம். இதில், துப்பாக்கிச் சுடும் தளத்தையும் அமைத்து அனைவரது நிம்மதியையும் கெடுக்கிறார்கள். மருதமலைக்கு வரும் பக்தர்கள், பாரதியார், அண்ணா பல்கலைக்கழகங்கள் மற்றும் சட்டக் கல்லூரிக்கு வரும் மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள். இதற்கு, எப்படி வனத்துறை அனுமதி அளித்தது எனத் தெரியவில்லை. களிறு திட்ட கூட்டத்தின்போது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம் என்றார்.

வனத்துறையினர் கூறியதாவது: பல்கலைக்கழக இடம் என்பதால், அத்திட்டத்தை தடுக்க முடியாது. பிரச்சினையின் தீவிரத்தை பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தெரிவித்துள்ளோம் என்றனர்.

பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கூறியதாவது: வன எல்லையோர பகுதி என்பதாலும், பல்கலைக்கழகத்துக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பதாலும் துப்பாக்கிச் சுடும் தளம் அமைக்க ஒப்புதல் அளித்தோம். வன விலங்கு பிரச்சினை குறித்து, வனத்துறை எந்த தகவலும் எங்களுக்கு அளிக்கவில்லை. உண்மையிலேயே அப்படியான பிரச்சினை அதிகம் என்றால், இத்திட்டம் மறுபரிசீலனை செய்யப்படும் என்றார்.

மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் கூறியதாவது: பல்கலைக்கழக இடத்தில்தான் சூட்டிங் ரேஞ்ச் அமைகிறது. வனத்துக்குள் அமைக்கப்படவில்லை. இதனால் காவலர்களுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிக்க வாய்ப்புள்ளது. நகரில் அதற்கான இடம் இல்லை என்றார்.

வனத்தை ஆக்கிரமிப்பது மட்டுமல்ல, எந்த வகையில் தொந்தரவுக்கு உட்படுத்தினாலும் வனச்சூழல் பாதிக்கும். அதனால், அங்குள்ள மக்களும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதே சூழல் ஆர்வலர்கள் முன்வைக்கும் கருத்தாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x