Published : 10 Sep 2017 10:40 AM
Last Updated : 10 Sep 2017 10:40 AM

சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பில்லை: பொதுக் குழுவுக்கு தயாராகும் பழனிசாமி அணி - உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி

அதிமுகவில் முதல்வர் பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சிறப்பு அழைப்பாளர்கள் இன்றி பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகிறது.

அதிமுகவில் தற்போது முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் இணைந்து, அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை வரும் 12-ம் தேதி கூட்டுவதாக அறிவித்துள்ளனர். அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பர் 28-ம் தேதி பொதுக்குழு கூடியது. அப்போது, சசிகலா தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்துதான் பல்வேறு சிக்கல்கள் அதிமுகவில் உருவாகின.

இந்நிலையில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கும் வகையில், வரும் செப்.12-ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டப்படுகிறது. இதை எதிர்த்து தினகரன் ஆதரவாளர்கள் உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையில், பொதுக்குழு கூட்டத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை, அதிமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 2,300-க்கும் மேற்பட்ட பொதுக்குழு, 750-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்களை அழைத்து வர வேண்டிய பொறுப்பு மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக பொதுக்குழு, செயற்குழுவில் உறுப்பினர்களாக இல்லாதவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படுவர். ஆனால், செப்.12-ம் தேதி நடக்கும் கூட்டத்தில், அவர்களுக்கு அழைப்பு இல்லை.

மற்றவர்களுக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அழைப்பிதழ் உள்ளவர்களை மட்டும் உள்ளே அனுமதிக்கும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுதவிர, மாவட்ட அமைச்சர்களும், தங்கள் மாவட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை அழைத்து பேசி வருகின்றனர்.

நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கைத் தாண்டி பொதுக்குழுவை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டிய அவசியம் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோருக்கு ஏற்பட்டுள்ளது. வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வதற்கான, சட்ட ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காஞ்சிபுரத்தில் முதல்வர் பழனிசாமியிடம் நிருபர்கள் வழக்கு குறித்து கேட்டபோது,‘நீதிமன்றத்தில் உள்ள வழக்கு குறித்து நான் எதுவும் பேச முடியாது’ என்று பதிலளித்துவிட்டார். ஆனால், விமான நிலையத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும்போது, ‘அதிமுகவில் 5-ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டால் பொதுக்குழுவை கூட்டலாம். அந்த வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்த சட்ட திட்டப்படி, சட்டத்துக்குட்பட்டுதான் பொதுக்குழுவை கூட்டியுள்ளோம். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். எனவே திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும். அன்று 100 சதவீதம் உறுப்பினர்கள் பங்கேற்பார்கள். அந்த பட்டியலை நாங்கள் வெளியிடுவோம். மேலும், 9 எம்எல்ஏக்களில் ஜக்கையன் வந்துவிட்டார். மற்றவர்களும் விரைவில் வருவார்கள்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x