Published : 24 Apr 2023 04:29 AM
Last Updated : 24 Apr 2023 04:29 AM

டேன்ஜெட்கோவில் 10,260 காலிப்பணியிடங்கள் - முதல்கட்டமாக 200 இடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப அரசு அனுமதி

சென்னை: தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (டேன்ஜெட்கோ) முதல்கட்டமாக 200 தொழில்நுட்ப உதவியாளர் காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக எரிசக்தித் துறைச் செயலர் ரமேஷ் சந்த் மீனா பிறப்பித்த உத்தரவு: கடந்த ஆண்டு மார்ச் 30-ம் தேதிநிதித்துறை பிறப்பித்த உத்தரவில், "நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்கள், நேரடி நியமனம் மூலம் 25-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பும்போது அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் 107-வது வாரிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, மின்னியல் பிரிவில் 400 உதவிப் பொறியாளர்கள், 600 தொழில்நுட்ப உதவியாளர்கள், மெக்கானிக்கல் பிரிவில் 50 உதவிப் பொறியாளர்கள், கணக்கு பிரிவில் 300 இளநிலை உதவியாளர்கள், சிவில் பிரிவில் 60 உதவிப் பொறியாளர்கள், 850 மின் கணக்கீட்டாளர்கள், 8 ஆயிரம் கள உதவியாளர்கள் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் உள்ள 10,260 காலிப்பணியிடங்களை நிரப்ப கழகத்தின் மேலாண் இயக்குநர் அரசிடம் அனுமதி கோரியுள்ளார்.

இதை உயர் நீதிமன்ற உத்தரவின்படி கவனமாகப் பரிசீலித்த அரசு 10,260 காலிப்பணியிடங்களில் முதல்கட்டமாக மின்னியல் பிரிவில் 200 தொழில்நுட்ப உதவியாளர் பணிகளில் ஆட்களை நியமிக்க 2 நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்கிறது. அதன்படி, இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை டேன்ஜெட்கோ அணுக வேண்டும்.

மேலும், மனிதவள கொள்கையை வெகு விரைவில் வகுப்பதோடு ஓய்வூதியத்துக்கான நிதியத்தை ஏற்படுத்த வேண்டும். மனிதவளத்தை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x