Published : 23 Sep 2017 10:03 AM
Last Updated : 23 Sep 2017 10:03 AM

ராமேசுவரம் கோயிலில் உள்ள 6 புனித தீர்த்தங்களை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 1 முதல் 6 தீர்த்தங்களின் தண்ணீரை குழாய் வேறு பகுதிக்கு கொண்டு வந்து பக்தர்களுக்கு தெளிக்கும் வசதியை 2 வாரத்தில் ஏற்படுத்த வேண்டும் என அறநிலையத்துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மேம்பாடு தொடர்பாக கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெண்ணிலா என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநலன் மனு உயர் நீதிமன்ற கிளையில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் ராமேசுவரம் மேம்பாடு தொடர்பாக ஆய்வு செய்ய வழக்கறிஞர்கள் ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் பலமுறை ஆய்வு மேற்கொண்டு பல்வேறு பரிந்துரைகளை நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

கோவில் வளாகத்தை சுத்தமாக பராமரிக்க கோயிலுக்குள் இருக்கும் தீர்த்தக் கிணறுகளுக்கு செல்வதற்கு இரண்டாவது பிரகாரத்தில் உயர் நடைமேடை அமைக்க வேண்டும். 1 முதல் 6 தீர்த்தக் கிணறுகளில் தீர்த்தம் தெளிக்கும் பகுதியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு பரிந்துரைகளை வழக்கறிஞர் ஆணையர்கள் தெரிவித்திருந்தனர். அதாவது, இந்த 6 தீர்த்தங்களில் இருந்து குழாய்கள் மூலம் ஒரே இடத்தில் தண்ணீரை கொண்டு வந்து பக்தர்களுக்கு தெளிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இதனிடையே ராமேசுவரம் கோயில் பகுதியில் வாகனங்களை அனுமதிக்கக்கோரியும், தனுஷ்கோடி பகுதியிலுள்ள பல கிராமங்களில் அடிப்படை வசதி செய்யக்கோரியும் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் செப். 17-ல் ராமேசுவரம் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அறநிலையத்துறை ஆணையர், ராமநாதசுவாமி கோவில் இணை ஆணையர்/ செயல் அலுவலர் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கோயிலில் உள்ள 1 முதல் 6 தீர்த்தங்களை பக்தர்களுக்கு வசதியான வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு சாரதாபீடம் சங்கராச்சாரியாரிடம் 2015-ல் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டம் அறநிலையத்துறை ஆணையர் வசமுள்ளது. 6 தீர்த்தங்களையும் வேறு இடத்துக்கு மாற்ற 2 வாரத்தில் அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோயிலில் தற்போது உள்ள 3 பேட்டரி கார்கள் பழுதாகியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. பேட்டரி கார்களை பழுதுநீக்க வேண்டும். பழுதுபார்க்க முடியாத நிலை இருந்தால், புதிதாக 5 பேட்டரி கார்களை வாங்க அறநிலையத் துணை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x