Published : 19 Sep 2017 03:55 PM
Last Updated : 19 Sep 2017 03:55 PM

இரட்டை இலை சின்னம் யாருக்கு?- நரேஷ் குப்தா பேட்டி

இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கு கிடைக்குமா என்பது குறித்து தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேட்டி அளித்துள்ளார்.

தகுதி நீக்கம் பிரச்சினை ஒரு புறம் ஓடிக்கொண்டிருக்க டெல்லியில் தேர்தல் ஆணையத்தை எடப்பாடி பழனிசாமி அணியினர் அணுகியுள்ளனர்.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கும் என்பது குறித்து முன்னாள் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் 'தி இந்து' தமிழ் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:

அதிமுக அணியினர் அமைச்சர் ஜெயகுமார் தலைமையில் தேர்தல் ஆணையத்தில் பொதுக்குழு முடிவை கொடுத்துள்ளனர். இவர்கள் அங்கீகரிக்கப்பட வாய்ப்புள்ளதா?

தேர்தல் ஆணையத்தை பொறுத்த வரை தற்போது சின்னம் கொடுப்பது போன்ற விஷயத்தை பற்றி மட்டுமே பார்க்கவேண்டும். தற்போது லிஸ்ட் அவுட் செய்வதா சின்னம் கொடுப்பதா என்பதைத்தான் பார்ப்பது வழக்கம்.

கட்சிக்குள்ளே நடப்பதை ஒரு வரைமுறை அளவுதான் பார்க்க முடியும். கட்சி விதிப்படி படி என்ன செய்துள்ளார்கள் என்பதைக் கண்காணித்து அதில் சின்னம் கொடுப்பது பற்றித்தான் பார்ப்பார்கள். கட்சியின் உள் விவகாரங்களில் அதிகம் நுழைந்து முடிவெடுக்க மாட்டார்கள். ஆனாலும் நேரம் எடுத்துத்தான் முறைப்படி விசாரணைக்கு பிறகே முடிவெடுப்பார்கள்.

தங்களைக் கேட்காமல் முடிவெடுக்கக் கூடாது என்று தினகரன் தரப்பினர் மனு கொடுத்துள்ளார்களே அவர்களை அழைத்து விசாரிப்பார்களா?

கட்டாயமாக அவர்கள் தரப்பையும் அழைத்துப் பேசிய பின்னர் தான் முடிவெடுப்பார்கள். அதுவும் நடக்கும். கால அவகாசம் இருப்பதால் அதற்கு ஏற்றார் போல் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.

ஓபிஎஸ், எடப்பாடி தரப்பில் பொதுக்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்கள் வந்து முடிவெடுத்ததாக சொல்கிறார்களே?

பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களை கூட்டியதாக நானும் செய்தி படித்தேன். மெஜாரிட்டி ஆதரவு இருக்கும் போது சின்னம் கொடுப்பதில் பிரச்சினை வராது. அப்படி இருக்கும் பட்சத்தில் தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும்.

தேர்தல் ஆணையத்திற்கு சின்னம் கொடுக்கவும் முடக்கி வைக்கவும் உரிமையுண்டு. அப்படி பார்க்கும் போது யாருக்கு மெஜாரிட்டி இருக்கிறது என்று தான் பார்ப்பார்கள். கட்சி விதிப்படி முறைப்படி செய்துள்ளார்களா? தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்களா? என்று பார்ப்பார்கள்.

ஓரளவு தான் மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள். பெரும்பான்மை தான் முக்கியம், மற்றபடி விரிவாக ஒரு கட்சியின் உள் விவகாரங்களில் என்ன நடக்கிறது என்பது பற்றியெல்லாம் தேர்தல் ஆணையம் தீவிரமாக நுழைந்து பார்க்காது.

இவ்வாறு நரேஷ் குப்தா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x