Published : 22 Apr 2023 04:59 AM
Last Updated : 22 Apr 2023 04:59 AM

தமிழகத்தில் சாதி, மதச்சண்டைகள், கலவரங்கள் இல்லை - சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்களை நாங்கள் நிச்சயமாகக் காப்பாற்ற மாட்டோம் என்று உறுதிபட கூறிய முதல்வர், தமிழகத்தில் சாதி, மதச் சண்டைகள், கலவரங்கள், கூட்டு வன்முறைகள் இல்லை என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் காவல், தீயணைப்புத் துறை குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கடந்த இரண்டாண்டுகளுக்கு முன், இதே ஏப்ரல் மாதத்தில் தமிழக மக்கள் திமுகவை ஆட்சியில் அமர்த்த முடிவெடுத்தனர். மே 7-ம்தேதி நான் முதல்வராகப் பொறுப்பேற்றேன். இன்னும் 2 வாரங்களில் திமுக ஆட்சி 2 ஆண்டுகள் நிறைவடைந்து 3-ம் ஆண்டில் அடியெடுத்துவைக்க இருக்கிறது. மிக மோசமான நிதி நெருக்கடி, நிதி மேலாண்மையில் மத்திய அரசின் உதவியின்மை ஆகிய மிகக் கடினமான சூழல்கள் உள்ள போதிலும், மகத்தான சாதனைகளை இந்த அரசு மக்களுக்கு செய்து தந்துள்ளது.

மகளிருக்கு இலவசப் பேருந்து வசதி, ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் முதல் மாதம் ரூ.1000, மாவட்டங்கள்தோறும் ஒரு கோடி பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், ரூ.62 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை ரூ.30 ஆயிரம் கோடியாககுறைக்கப்பட்டது, தமிழகத்தை நோக்கி ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் முதலீடுகள் ஈர்ப்பு, மாநில உள்நாட்டு உற்பத்தி 6.11 சதவீதமாக உயர்வு என துறைவாரியாக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவையே ஈர்க்கும் ஆட்சி: அதனால்தான், அவதூறுகளை யார் அள்ளி வீசினாலும், திசைதிருப்பும் திருகுவேலைகளை யார் செய்தாலும், மக்கள் மனங்களை யாராலும் மாற்ற முடியவில்லை; ஏமாற்றவும் முடியவில்லை. இது இந்தியாவையே ஈர்க்கும் ஆட்சியாக அமைந்துள்ளது. நாங்கள் கவனிக்கத் தவறும் இடங்களைச் சுட்டிக்காட்டும் உரிமை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு உண்டு. ஆனால், அந்தக் கடமையிலிருந்து தவறி, என்ன நிலைக்கு அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் எனக்கு வேதனையாக உள்ளது.

சில காவலர்களின் செயல்பாடுகள் குறித்து இங்கே விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அவர்கள் செயல்பாட்டில் குறையே இல்லை என்று நான் சொல்லமாட்டேன். குறை கண்டுபிடிக்கப்பட்டதும், அவை திருத்தப்பட்டன. கண்டும் காணாமல் விடப்படவில்லை. சம்பவம் நடந்ததும் குற்றவாளி தப்பிவிட்டார் என்றோ, குற்றவாளியைக் கைதுசெய்யவில்லை என்றோ, குற்றவாளியைக் காப்பாற்றினார்கள் என்றோ புகார் இருந்தால் சொல்லுங்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன், அதில் உறுதியாக நான் இருக்கிறேன்.

எந்தக் குற்றவாளியையும், அது யாராக இருந்தாலும், எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும், அவர்களை நாங்கள் நிச்சயமாகக் காப்பாற்ற மாட்டோம் என்று உறுதியளிக்கிறேன். சிறுசிறு தவறுகள் நடந்திருந்தாலும், அதனைத் திருத்திக் கொள்ளும் பண்பை காவல் துறையினர் பெற வேண்டும.

தமிழகத்தில் சாதி, மதச் சண்டைகள், கூட்டு வன்முறைகள், கலவரங்கள், துப்பாக்கிச் சூடுகள், காவல்நிலைய மரணங்கள் இல்லை. இதெல்லாம் இல்லாததற்கான அடையாளமாகத்தான் புதிய தொழிற்சாலைகள், முதலீடுகள், புதிய நிறுவனங்கள் வருகின்றன. அனைத்து துறைகளிலும் வளர்ச்சிகள் வருகிறது. ‘அமைதியான மாநிலம் தமிழகம்’ என்ற நற்பெயர் வருகிறது. ஒரு மாநிலம் வளருகிறது என்றால், அது அமைதியான மாநிலமாக இருக்கிறது என்று பொருள்.

உடனுக்குடன் கைது: சட்டம் ஒழுங்கைப் பேணி, பொதுமக்களிடம் அச்ச உணர்வை அரசு போக்கி இருக்கிறது. எந்தவிதக் குறுக்கீடும் இன்றி காவல் துறையை செயல்பட அனுமதித்துள்ளோம். இதனால்தான் சமூக விரோதிகள், கொள்ளையர்கள், வன்முறையாளர்கள் உடனுக்குடன் கைது செய்யப்படுகின்றனர்.

மாநில காவல் துறையினர் சட்டம் - ஒழுங்கை, தொடர்ந்து சிறப்பாகப் பராமரித்து வருவதோடு, குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் சாதி, சமய வெறியர்கள், சமூக விரோதிகள் மீது அரசுமேற்கொண்ட கடும் நடவடிக்கைகள் காரணமாக, சாதி, சமய பூசல்கள் ஏதுமின்றி மாநிலத்தில் அமைதி நிலவுகிறது.

மிகப்பெரிய மோதல், அரசின் வேகமான நடவடிக்கைகளால் எப்படி தவிர்க்கப்பட்டது என்பதற்கு வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று பரப்பப்பட்ட வதந்திகள் மீது எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கைகள்தான் எடுத்துக்காட்டு. இந்த விவகாரம் தொடர்பாக,இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மொத்தம் 88வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 178 பேர் கைது செய்யப்பட் டனர்.

எதிர்காலத்தில் சமூக வலைதளங்களில் பரப்பப்படக் கூடிய வதந்திகளால் உலகளவில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை பெருமளவில் இருக்கும் என்று பலராலும் கூறப்படுகின்ற நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பிற மாநில அரசுகளும் மனம்திறந்து பாராட்டின.

மாநிலத்தின் வளர்ச்சிக்கு வடமாநில தொழிலாளர்களின் பங்களிப்பை இந்த அரசு நன்றாக உணர்ந்துள்ளது. அவர்களையும் நமது மாநிலத்தவராகக் கருதி அவர்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மாநில அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x